News Just In

3/05/2020 09:55:00 AM

இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமுதாயத்தினரோடு ஒட்டுறவில்லாமல் ஒதுங்கி வாழ்வது உகந்ததல்ல-நஸீர் அஹமட்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
இலங்கை முஸ்லிம்கள் ஏனைய சமுதாயத்தினரோடு ஒட்டுறவில்லாமல் ஒதுங்கி வாழ்வது உகந்ததல்ல என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவரும் ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் (அறிவு இல்லம்) கலாசாலையின் ஸ்தாபருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரின் முதலாவது ஹிப்ழ் மதரசாவான குல்லிய்யது தாரில் உலூம் (அறிவு இல்லம்) கலாசாலையின் பட்டமளிப்பு, புனித அல்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசளிப்பு. கௌரவிப்பு ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் கலாசாலை வளாகத்தில் விமர்சையாக இடம்பெற்றன.

மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், கல்விமான்கள், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய ஸ்தாபகர் நஸீர் அஹமட், எந்த விடயத்தை எடுத்துக்  கொண்டாலும் அதிலே அரசியலை, மதத்தை, இனத்தை, மொழியைக் கலந்து பார்க்கின்ற இலங்கையின் கலாசாரத்தால் எல்லாமே சீரழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.

தகுதியான திறமையான ஒரு நிருவாகியை மக்கள் பெற்றுக் கொள்ள முடியாமலிருப்பதற்கும் இந்த அரசியல் பின்னணிகளே காரணமாக அமைந்து விடுகின்றன.

எதிலும், எங்கும் அரசியல் எனும் அசிங்கம் கலந்திருப்பதனால் மக்கள் அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.

சிறந்த நிருவாகி எந்த மத, இன, சமூகப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. மக்கள் அவரது சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் துரதிருஷ்ட வசமாக மக்களை அவ்வாறு வழிநடத்துவதற்கு நம் நாட்டின் பாரியம்பரியமான, அசிங்கமான அரசியல் வழிவந்த கலாசாரம் வழி விடுவதில்லை.

இந்த அசிங்கத்தின் காரணமாக ‪மக்களுக்கான ஒரு அற்ப சேவையைக் கூட வழங்க முடியாமல் போய்விடுகின்றது.

நான் மாகாண முதலமைச்சர் எனும் அரசியல் அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கான அரச சேவைகளை இழுபறியில்லாமல் வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். அதனை மக்கள் அனுபவித்தார்கள்.

சிந்தனைத் தெளிவோடு நாங்கள் எங்களது செயற்பாடுகளை மறுபரீலனை செய்யாவிட்டால் கைசேதப்படுகின்ற நிலைமையை எதிர்நோக்க வேண்டிவரும்.

பழைய போக்கிலே பயனில்லை என்பதை உணர்ந்து புதிய போக்கிலே மதிநுட்பத்தோடு, சாணக்கியத்தோடு, தெளிவோடு முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்.

இவற்றைச் சரிவரத் திட்டமிடாது செயற்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களால் திட்டமிட்டு நசுக்கப்படப் போகின்ற விடயத்தில்pருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய் விடும்.

எல்லாமே திட்டமிட்டு மிக சூட்சுமமாக காய் நகர்த்தப்படுகின்ற ஒரு சூழ்நிலையிலே முஸ்லிம் சமூகம் எந்தவித அறிவார்ந்த திட்டமிடல்களும் இல்லாமல் அல்லது தங்களுக்கு எதிராக வகுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளை அறிந்து கொள்ளக் கூட திராணியற்ற முறையில் வாழ்ந்து கொண்டால் அதனை விட மடமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தின் முன்னால் பாரிய சவால்கள் குவிந்து கிடக்கின்றன. இதனை முழு அறிவுப் பலத்தோடும் சாணக்கியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நிபுணத்துவம் எல்லாமே சீர்குலைக்கப்பட வேண்டும் என்று சவால் விட்டுக் கொண்டிருக்கின்ற மதவாத, இனவாதத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டுக்குள் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கனின்றோம்.

எனவே, இதுபற்றி நாம் விழித்துக் கொள்ள வேண்டும். மதரசாக்கள் வெறும் மார்க்க அறிஞர்களை மாத்திரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று இல்லாமல் அங்கிருந்து அனைத்துத் துறைகளையும் கற்றுத் தெளிவடைந்த, பன்மொழி ஆற்றலுள்ள வல்லுநர்கள் உருவாக்கப்பட வேண்டும்,

வைத்தியத்துறை, சட்டத்துறை, கல்வித்துறை, கணிதத்துறை, விஞ்ஞானத்துறை உள்ளிட்ட சகல துறைசார்ந்தவர் நிபுணர்களும் மத்ரசாக்களில் இருந்து உருவாக வேண்டும்.

அறிஞர்களை உருவாக்குகின்ற அதேவேளை ஆன்மீகத்தோடு பயணிக்கின்ற அற்புத இடங்களாக மத்ரசாக்கள் மிளிர வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவரும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் உப அதிபருமான அஷ்ஷெய்க் எஸ்.எம். அலியார் ஹஸரத் அவர்களும் விஷேட அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். அன்வர் அலி காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரி நிருவாக செயலாளரும் ஹாபிழ்கழ் ஒன்றிய ஆலோசகருமான மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) உட்பட இன்னும் பல உள்ளுர் வெளியூர்  மார்க்க மேதைகள் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஜாமிஅதுஸ் ஸித்தீக்கியா மகளிர் அறபுக் கல்லூரி அதிபரும் காத்தான்குடி பைத்துஸ் ஸகாத் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி நிகழ்வில் ஹாபிழ்களின் சிறப்புப் பற்றி விஷேட சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வில் குல்லியது தாரில் உலூம் கலாசாலையின் ஸ்தாபகரும் முன்னாள் முதல்வருமான ஹாபிழ் நஸீர் அஹமதுக்கு மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவரும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் உப அதிபருமான அஷ்ஷெய்க் எஸ்.எம். அலியார் ஹஸரத் அவர்களால் தாஜுல் ஹுப்பாழ் (ஹாபிழ்களின் கிரீடம்) என்ற பட்டம் பொறித்த தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.

No comments: