News Just In

3/04/2020 08:30:00 AM

மட்டக்களப்பின் இயற்கைச் சொத்தான மாந்தீவு முறையாக பயன்படுத்தப்படுமா??

(லோ.தீபாகரன் )
இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான வாவி ஏறத்தாழ 27527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படும் வாவி மட்டக்களப்பு வாவியாகும்.

தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு, எருமைத் தீவு, புளியந்தீவு, கொக்குத்தீவு, சல்லித்தீவு என பல தீவுகள் காணப்படுகின்றன இவற்றில் எருமைத்தீவு மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் அடங்குகின்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவிசால நிலப்பரப்பை கொண்ட எழில்மிகு வாவி சூழ நடுவில் மாந்தீவு அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 96 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாக இது உள்ளதாக கூறப்படுகின்றது. இத்தீவு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள தீவாகும்

மாந்தீவு மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக உள்ளது. இந்த தீவிலேதான் தொழுநோயாளர் வைத்தியசாலை உள்ளது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையின் அருகில் 116 வருடம் பழமை வாய்ந்த சித்திர வேலாயுத சுவாமி கோயில் உள்ளது

இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு வாவிக்கு நடுவே காணப்படும் மாந்தீவில் அப்படி என்ன இருக்கிறது?..

சுமார் 96 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அந்த தீவில்தான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான தொழு நோயாளர் பிரிவு உள்ளது. அங்கு செல்ல வேண்டுமாக இருந்தால் படகில்தான் பயணிக்க வேண்டும்.

மூன்று கட்டிடங்களைக் கொண்ட குறித்த தீவில் உள்ள தொழுநோயாளர் பிரிவில் ஒரே ஒரு நோயாளர் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு ஒரு நோயாளரை பராமரிப்பதற்கு பலர் இன்றும் பணிவுரிவதாக கூறப்படுகின்றது

குறித்த தீவு முழுவதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதேவேளை மாந்தீவு வைத்தியசாலையை மட்டக்களப்பு சிறைச்சாலையாக மாற்ற முற்படுவதாகவும் மாந்தீவு வைத்தியசாலையை மரணதண்டனை ஆயுள் தன்டனை பெற்ற கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இருந்தும் அவை செயற்படத்தப்படவில்லை

இத்தீவை மட்டு சிறைச்சாலைக்கு கையளித்து விட்டு சிறைச்சாலைக்குரிய காணியை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்வதாகவும் ஆரம்பத்தில் கருத்துக்கள் வந்தன. ஆனால் தற்போத வரை இத்தீவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை அழகு பொருந்திய மாந்தீவு பிரதேசத்தை மட்டக்களப்புக்கு அழகு சேர்க்கவும் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய வகையிலும் புனரமைத்து வழங்குமாறு மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புகள் அரசியல் பிரமுகர்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இத்தீவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக மற்றும் வவுணதீவு பிரதேச செயலக எல்லையில் காணப்படுவதால் இத்தீவை சுற்றி வவுணதீவு, மங்கிக்கட்டு, திருப்பெருந்துறை, திமிலதீவு, வலையறவு, புதுநகர், கன்னங்குடா போன்ற பழம்பெரும் கிராமங்களும் அங்கு ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்கின்றனர். அதில் இயற்கை வளங்களும் ஆரோக்கியமான சூழயுலும் காணப்படுகின்றது

இத்தீவை அண்டிய கண்ணாபற்றை மற்றும் கரையோரத்தில் வளர்ந்துள்ள சிலவகை தாவரங்களின் கீழ்பகுதியில் பலவகை மீனினங்கள் இயற்கையான இனப்பெருக்கம் அதிகமாக செய்கின்றன இந்த ஆற்றுப்பகுதியை நம்பி பல குடும்பங்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதார தொழிலாக செய்கின்றனர்

இத்தீவில் பல அரியவகை உயிரினங்கள் வாழ்வதுடன் இத்தீவில் பல வகையான பறவைகளும் வந்து தங்கி செல்கின்றன. எதிர்காலத்தில் இத்தீவை இதன் இயற்கை அழகு குறையாமல் இயற்கைக்கும் இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் வகையில் சிறந்த இயற்கை சுற்றுலாத்தலமாக அரசு பொறுப்பேற்று அல்லது மாநகரசபை பொறுப்பேற்று நடத்தினால் மட்டுநகரின் பொருளாதாரம் மேம்படுவதுடன் சுற்றுலாத்துறையும் விருத்தியடையும்

இத்தகைய வளம் நிறைந்த தீவில் தற்போத பரபரப்பாக பேசப்படும் கொனரா வைரசால் என சந்தேகிக்கப்படுபவர்களை தங்க வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.இது எமது மக்களுக்கும் மண்ணுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

No comments: