News Just In

1/12/2020 07:46:00 PM

பொறுப்புக் கூறாத வெறுப்புப் பேச்சுக்கு விலை கொடுக்க முடியாது-முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பொறுப்புக் கூறாத வெறுப்புப் பேச்சுக்களுக்கு நாட்டு மக்கள் இனிமேலும் அதிக இழப்புக்களைச் சந்தித்து விலை கொடுக்க முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் ஆற்றிய வெறுப்புப் பேச்சு தொடர்பான எதிர்வினையாற்றும் அறிக்கை ஒன்றை முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சரத் பொன்சேகாவின் இனவாத வெறுப்புப் பேச்சுக்களைச் சாடியுள்ள நஸீர் அஹமட், நாட்டின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் உயர் சபையில் சரத் பொன்சேகா போன்ற தேசிய அரசியல்வாதிகள் இனவாத, மதவாத சிந்தனைகளை உயிரூட்டுவது வெறுக்கத் தக்கதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள்? தமிழ் பயங்கரவாத சூழல் இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர் வினையாற்றும் வகையிலேயே இந்த அறிக்கை முன்னாள் முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் சிறுபான்மையினரைக் குறிவைத்து சரத்பொன்சேகா பேசியிருப்பது இந்த நாட்டில் தலைவர்களே இனவாத வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்து விட்டிருக்கின்றது என்று சாடியுள்ள முன்னாள் முதலமைச்சர் இத்தகைய இன வெறுப்புப் பேச்சுக்களை நாட்டு நலன் கருதி சரத் பொன்சேகா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் நின்றபோது அவருக்கு இந்த நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் முழுமையான ஆதரவைத் தந்தார்கள்.

அவ்வாறாயின் நாட்டின் தலைவராக சிங்கள பௌத்தர் வரப்போகிறார் என்பதை தமிழ் முஸ்லிம் மக்கள் இனவாத வெறுப்போடு அணுகுவதில்லை என்பதையே புலப்படுத்தி நிற்கின்றது என்றும் நஸீர் அஹமட் நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் பயங்கரவாதத்தையும், அழிவு நாசத்தையும் விரும்புவதில்லை. ஆனால் பயங்கரவாத வன்முறைகளில் எல்லா சமூகங்களிலுமுள்ள ஒரு சிலர் விரும்பி அழிவு நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை சமூகம் அங்கீகரிப்பதுமில்லை. அதன் முன்னுதாரணமாகவே இலங்கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 65 பேரை அணி திரண்டு காட்டிக் கொடுத்தார்கள் என்றும் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யதார்த்தத்தை அறியாமல் சரத் பொன்சேகா போன்றவர்கள் அறிவிலித்தனமாக வெறுப்புப் பேச்சை விரும்பி விதைப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும் என்று முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் அந்த அறிக்கையில் சாடியுள்ளார்.

அரசியல் யாப்பை ஏற்று அதனை அங்கீகரித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு இனவாத மதவாத வெறுப்புப் பேச்சை விதைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: