News Just In

1/11/2020 02:49:00 PM

ஆரையம்பதி-தவிசாளர் தலைமைத்துவம் சரியில்லாதவர்; தவறினை மறைக்க தாக்கப்பட்டதாக கூறுகிறார்-தினேஷ்


மட்டக்களப்பு, ஆரையம்பதி மண்முனை பிரதேச சபை தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் வியாழக்கிழமை(09) சபை அமர்வின் போது தாக்கப்பட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தயானந்தன், தினேஷ்குமார் எனும் இரு உறுப்பினர்களால் தான் தாக்கப்பட்டதாக ஆரையம்பதி மண்முனை பிரதேச சபை தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்

இது தொடர்பாக நேற்று (10.01.2020) மண்முனை பிரதேச சபை உறுப்பினர் தினேஷ்குமார் எமது ஊடகத்திற்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

மண்முனை பிரதேச சபை தவிசாளர் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் சபைக் கூட்டங்களை புறக்கணித்துவிட்டு சென்றார் எனும் கேள்வி எழுப்பப்படுவது தொடர்பில் பேசுவதற்கு எங்களுக்கு கிடைப்பது மாதத்தில் ஒரு நாள்தான். அன்றுதான் மக்களது பிரச்சினைகளை அவரிடம்  பேசி, தீர்வு கேட்க முடியும்.

அவ்வாறான ஒருநாளில் அவரிடம் கேள்விகளை கேட்க முற்படும் போது, அவர் உப தவிசாளரிடமோ அல்லது சபையை ஒத்திவைத்துவிட்டோ செல்வது வேண்டுமென்றே செய்வது போன்றுள்ளது.

இது தொடர்பில் அவரிடம் கேட்டால் உறுப்பினர்கள் என்னை வேலை செய்ய விடுகிறார்கள் இல்லை எனச் சொல்கிறார். மொத்த உறுப்பினர்களும் ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் செய்யும் பிரச்சினைகளும், அவர் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும்தான் காரணம்.

ஒருவர், இரண்டு பேராவது அவருக்கு ஆதரவாக இருந்தால் பரவாயில்லை.
மொத்த உறுப்பினர்களும் அவரை எதிர்ப்பதற்கு அவருடைய தலைமைத்துவம் சரியில்லை என்பதே காரணம். நேற்று நடந்த பிரச்சினையும் அதுதான். குழுநிலை கூட்டத்தை ஒத்திவைக்க முடியாத சந்தர்ப்பத்தில், சட்டத்தை மீறி அவர் புறக்கணித்துசென்றார்.

பின்னர் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அனுப்பிய கடிதத்தினை அடுத்து திரும்பவும் அந்த கூட்டம் உப தவிசாளரின் தலைமையில் நடந்தது. அவர் செய்த தவறினை மறைக்க என்னை தாக்கினார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டி பழி போட்டிருக்கிறார்.

சொல்லப் போனால் நாங்கள் அவர் அருகில் கூட நிற்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று தயானந்தான் வேலை விடயமாக போனதால் அவரால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சமுகமளிக்கமுடியவில்லை.

உண்மையான விடயம் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்தான் அவர் வெளியேறி சென்றாரே தவிர, அவர் தாக்கப்பட்டார் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அங்கிருந்த உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களிடம் கேட்டால் அதற்கான பதில் கிடைக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: