சம்பிக்கவை கைதுசெய்வதற்கு முன்னர் பிரதி சபாநாயகருக்கு பொலிஸார் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை கைது செய்த முறையானது தவறு என்று இப்போது சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முற்றிலும் தவறான புரிதல் ஆகும்.
நீதவான் நீதிமன்றத்தின் பிடியாணையை விடவும், சட்டமா அதிபரின் ஆலோசனையானது மிகவும் அதிகாரம் கொண்டதாகும். அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும்போது அதுகுறித்து சபாநாயகருக்கு முன்னறிவிப்பு விடுக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
அப்படி இருந்தால் எந்த பிரிவில் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முன்வருமாறு கூறுகின்றேன். பொலிஸ்மா அதிபரிடம் சபாநாயகர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும்போது அறிவுறுத்தல் விடுக்கப்படும்.
ஆனால் சம்பிக்க ரணவக்கவின் கைதின்போது, சபாநாயகர் நாட்டில் இருக்காததினால் கைதுசெய்வதற்கு முன்னர் பிரதி சபாநாயகருக்கு பொலிஸார் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார்கள். அதன்பின்னரே அவரைக் கைது செய்தனர்.
ஆகவே முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கைதின்போது எந்தவொரு சம்பிரதாயத்தையும் மீறப்படவில்லை. கைது செய்வதற்கான முன்னறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தால் தமது வாகன சாரதி துசித்த குமாரவைப் போன்று சம்பிக்க ரணவக்கவும் தலைமறைவாயிருக்கலாம்.
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க விபத்து இடம்பெற்றபோது வாகனத்தை செலுத்தவில்லை என்றும், தாமே செலுத்தியதாகவும் துசித்த குமார என்கிற அவருடைய சாரதி நீதிமன்றில் தெரிவித்த நிலையில்தான் சம்பிக்க ரணவக்க விடுவிக்கப்பட்டார்.
ஆனால் மீள்விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வாகசத்தை செலுத்தியதாக விபத்தில் காயமடைந்த நபரது நண்பர்கள் நேரில்கண்ட சாட்சியாக முன்னிலையாகி உள்ளனர்.
அதேபோல விபத்து இடம்பெற்றபின் சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசி ஊடாக அவரது சாரதிக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த சாரதி விபத்து இடம்பெற்ற பகுதியில் இருக்கவில்லை என்பது விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பிக்கவுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு 04 நிமிடங்கள் பேசியுள்ளார்.
ஆகவே இதில் முன்னாள் பிரதமரும் தொடர்புகொண்டு பேசுவதனால் விபத்தில் சம்பிக்க ரணவக்க நேரடியாக தொடர்புபட்டிருப்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியும்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்யும்போது எந்தவித முன்னறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments: