தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என்ற விவகாரம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசனின் கருத்தை ஊடகங்கள் அறிய முற்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் விபரிக்கையில்,
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது, அப்படி அரசு கூறவில்லை எனும் செய்திகளை எதிரும் புதிருமாக ஊடகங்கள் வெளியிடுகின்றன. இச்செய்திகளின் நம்பகத்தன்மையை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. புதிய ஜனாதிபதியும் அரசும் பதவிகளைப் பொறுப்பேற்று இரண்டே இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அதனிடையில் தேசிய கீதத்தை, ஒரு தேசிய மொழியில் பாடுவதில் சர்ச்சை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை இதே அரசுதான் வெளிக்கொணர வேண்டும்.
தமிழ் மொழி, இந்த நாட்டின் ஒரு தேசியமொழி. தேசிய கீதத்தை, தேசிய மொழியில் பாடுவதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
அரசும் அதன் சகாக்களும் வீண்புரளிகளை தோற்றுவித்து, தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது. தேசிய பாதுகாப்புப் பற்றியும் தேசிய ஒற்றுமை பற்றியும் தேசிய அபிவிருத்தி பற்றியும் கூறிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இதற்கு சரியான பதிலை கூறவேண்டும். தமிழ்மொழி மூலமாக தேசிய கீதம் பாடப்பட்டு வரும்போது ஏன் இந்தப் புதிய சர்ச்சை கிழப்பப்பட்டிருக்கிறது? சிங்கள மக்களின் ஏகோபித்த அபிமானத்தை பெறும் நோக்கமா அல்லது பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிரப்பவா? இதில் ஒன்றோ அல்லது பலவோ சரியாக இருக்கலாம் எது சரியென புரியவில்லை.
தேசிய ஒற்றுமையை விரும்பும், ஜனாதிபதி எந்தவொரு இனத்தின் மத்தியிலும் அந்த இனம் விரும்பாத ஒன்றை திணிக்க முற்படக் கூடாது. இவ்வாறான செயல்களே புலிகள் இயக்கம் தோன்றக் காராணமாயிருந்தது என்ற உண்மை ஜனாதிபதிக்குத் தெரியாத விடயமல்ல. அப்படியான யுகத்தை இந்த நாட்டின் தமிழ் மக்கள் மறந்திருக்கிறார்கள். அதை நினைவூட்டுவதுபோல் இது இருக்கிறது.
இந்த நாட்டை ஆண்ட பழைய அரசுகளும் இந்தப் பாணியிலேதான் ஆண்டுவந்தன. பண்டாரநாயக்க அதன் தோற்றுவாய். ஆதலால், அதே பாணியில் இப்போதைய ஜனாதிபதி அரசை நகர்த்த முற்படக் கூடாது. அது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நாட்டுக்கு தீங்கை கொண்டுவரும். ஆதலால், இவைகளை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments: