
சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிலையம் ரஷ்யாவுக்கு 4 வருட போட்டித் தடையை விதித்துள்ளது. இதன்மூலம், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ரஷ்யா இழந்துள்ளது.
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான முக்கியமான சர்வதேசப் போட்டிகளிலும் ரஷ்யா தனது தேசியக் கொடியைப் பயன்படுத்தவும், தேசிய கீதத்தை இசைக்கவும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
போலியான ஆதாரங்கள் அளித்தல், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆவணங்களை அளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் இந்தத் தடையை ரஷ்யாவுக்கு விதித்துள்ளது. இந்த தடையால் டோக்யோவில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்காவில் நடைபெற இருக்கும் 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் 2022இல் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் ரஷ்யா பங்கேற்க முடியாது.
எனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் ரஷ்யாவின் தேசிய கீதமும் கொடியும் அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் பொதுவான கொடியின் கீழ் அந்த போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவது தொடர்பாக ரஷ்யாவில் உலக சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் தகுதியும் ரத்து செய்யப்படவுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பிலான ஊழல்களை மறைக்கும் எண்ணத்தில் ஊக்கமருந்து பரிசோதனைகளுடன் தொடர்புடைய பெறுபேறுகளை அழித்தமை மற்றும் ஆய்வகத் தரவுகளை மாற்றி, போலியான சாட்சிகளை உள்ளீடு செய்தமை உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2020 ஒலிம்பிக் விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்களில் ரஷ்ய வீரர்களால் தமது தேசியக் கொடியின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.
No comments: