News Just In

12/08/2019 10:00:00 AM

வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் தாழமுக்கம்- மட்டக்களப்பில் சில இடங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

வங்காள விரிகுடா கடற் பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலையின் காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை டிசம்பர் 08ஆம், 10ஆம் திகதிகளில் அதிகரிக்க கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, நுவரெலியா, மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 100 - 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கண்டி, கேகாலை மற்றும் அம்பாந்தோட்ட மாவட்டங்களில் சில இடங்களில் 75 -100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments: