
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
திங்கட்கிழமை மாலைவேளையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்த கன மழையின் காரணமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் நிருவாகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தெரிவித்தார்.
இவ்விதம் தமது வாழ்விடங்கள் வெள்ள நீரினால் சூழப்பட்டவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதோடு சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் இவர்களுக்கு அவசர உதவிகளை வழங்க சமூக தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொருத்தமான இடைத் தங்கல் முகாம்கள் இல்லாததாலும் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு வரத் தயங்குவதால் அவர்களுக்கு அரச நிவாரணங்களைச் சிபார்சு செய்வதில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் தடப்பட்டுத் தேங்கி நிற்குசும் வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவதில் ஏறாவூர் நகர சபையுடன் இணைந்து பிரதேச செயலக அலுவலர்களும் இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் பணியாற்றி வருவதாக பிரதேச செயலாளர் அல்அமீன் மேலும் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் நிருவகிக்கப்படும் ஐயன்கேணி, மிச்நகர், ஏறாவூர் 2 பி பிரிவு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் கடுமையாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்தப் பகுதிகளிலிருந்து வெள்ள நீரை ஏறாவூர் வாவிக்கூடாக வெளியேற்றுவதில் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.







No comments: