(ஏ.எச்.ஏ ஹுஸைன்)
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட தலைமையக முன்றலில் "கலாசார சகோதர சங்கமம்" நிகழ்வு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ.வசந்தராசா தலைமையில் திங்கட்கிழமை (04.11.2019) மாலை இடம்பெற்றது.
சமூகங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்கில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கலாசார சகோதர சங்கமம் நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான வடிவேல் சக்திவேல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு கிராம மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யு வதிகள், சிறார்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இலங்கையின் அழகிய பல்லின கலாசாரத்தை எதிர்கால இளஞ்சமூகத்திற்கு இன்னும் சிறப்பானதாக்கிக் கையளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய ஏப்ரல் தற்கொலைத் தாக்குசதல் மக்களின் மனதில் ஏற்படுத்திய அச்ச உணர்வையு ம் பீதியையும் மக்களுக்கிடையிலான அவநம்பிக்கையையும் போக்கும் வகையில் சமூக சமய மட்ட சகவாழ்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.
சமூக கலாசார பாரம்பரிய விழுமியங்களைப் பறைசாற்றுவதன் மூலமும் அவற்றை மதிப்பதன் மூலமும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பலப்படுத்துவதன் மூலமே இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும். கலைகளின் ஊடாக அவற்றை மதிப்பதனுடாக சமாதான ஐக்கியத்தை கட்டி வளர்க்கலாம் என்ற சிறியதொரு முயற்சி ஐக்கியத்தின் வித்தாக நாட்டப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் ஏற்கெனவே இருந்தது போன்றும் தற்போது உள்ளது போன்றும் எதிர்காலத்திலும் இந்த நாட்டு மக்கள் இனங்களாக மதங்களாகப் பிரிந்து விடாமல் ஐக்கியப்பட்ட சமூகமாக வளர்ச்சி காண்பதற்கும் சமாதமானத்தைக் தக்கவைத்து அதனைப் போஷித்து வளர்ப்பதற்கும் நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களும் அவற்றைப் பின்பற்றுகின்ற பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களையும் அவற்றின் கலாசார பாரம்பரியங்களையும் பேணுவதின் அவசியத்தையும் அனைவரும் வலியுறுத்த வேண்டும்
அவரவர் கலாசார வாழ்வியல் அம்சங்களிலே முரண்பட்டு நிற்பது அர்த்தமற்றது என்பதை எதிர்கால இளஞ்சந்ததிக்கு உணர்த்த வேண்டும். சமாதானம், ஐக்கியம், கலாசார வாழ்வு கிராம மட்டங்களில் வலுப்பெறும்போதுதான் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிரந்தரமாகக் கட்டிக் காக்க முடியும். இனம், மொழி. மதம் என்பதற்கு அப்பால் புரிந்துணர்வின் மூலம் அன்பினால் இணைந்து கொள்ள முடியும்.
ஒரு சமூகத்தின் கலாசார பாரம்பரியங்களை அயலவர்களாக வாழும் அடுத்த சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். அதனை மதிக்க வேண்டும். அதுதான் புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கும். மத வெறி, மொழி வெறி, இன வெறி என்பது இந்த நாட்டின் சிறப்பான பாரம்பரியத்துக்கு உகந்ததல்ல என்பதை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எமது முயற்சியாகும் என்றார்.
இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராசா உட்பட அதன் அலுவலர்களும், தொண்டர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)












No comments: