விசேட அறிவித்தலை விடுத்திருக்கும் திரு.சஜித் பிரேமதாஸ, தமக்கு வாக்களித்த சகல பிரஜைகளுக்கும் தேர்தல் பிரசாரத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் மேற்கொண்ட தீர்மானத்தைப் பரிசீலித்து தாம் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதென தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றதை நாம் கண்டோம். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஜனநாயக ரீதியில் பெற்ற வெற்றியினதும், ஸ்தாபன மறுசீராக்கல்களினதும் பெறுபேறாகும். இதன்மூலம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரங்கள் கிடைத்ததுடன் சட்டவாட்சியும் நிலைநாட்டப்பட்டது.
இந்த நடைமுறையை முன்னெடுத்துச் சென்று ஜனநாயக நிறுவனங்களையும் பெறுமானங்களையும் மென்மேலும் வலுப்படுத்தி, அவற்றைப் பாதுகாக்குமாறு புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக திரு.சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்திய காலப்பகுதியில் அமைதிச் சூழலைப் பேணி, புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களுக்கோ, தமக்கோ இம்சைகள் மேற்கொள்ளப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: