News Just In

11/09/2019 02:29:00 PM

கல்லடியில் மௌலானாவின் பதாதைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு - அகற்றுமாறு உத்தரவிட்ட முதல்வர்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வைக்கப்பட்ட அலிசாகிர் மௌலானாவின் உருவம் பொறித்த பெரிய அளவான பதாதையை அப்புறப்படுத்தக்கோரி மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் பொதுமக்கள் இன்று (09.11.2019) எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.

நிலைமை தொடர்பில் உடன் அறிந்துகொண்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவற்றை உடனடியாக அகற்றுமாறு உரியவர்களுக்கு கட்டளையிட்டார்.

எனினும் பதாதை அகற்றப்படாமையினால் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மாநகர முதல்வர் அவற்றை அகற்ற உத்தரவிட்டதனைத் தொடர்ந்து பதாதை அகற்றப்பட்டது.

ஆனால் அகற்றப்பட்ட பதாதைக்கு மாற்றீடாக சிறிய அளவில் அலிசாகிர் மௌலானாவின் உருவம் பொறித்த பதாதையை வைக்க முற்படுத்தபோது மீண்டும் மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

கல்லடி பிரதேசம் அதிகம் தமிழர்கள் வாழும் பிரதேசமாதலால் இங்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் ஒருவரின் பதாதையே வைக்கப்படவேண்டுமெனவும் தமிழர்களின் கொள்கைக்கு முரணான அரசியல்வாதிகளின் பதாதைகளை இங்கு காட்சிப்படுத்த இடமளிக்கமாட்டோமென பிரதேச மக்கள் இதன்போது கருத்து வெளியிட்டனர்.

இறுதியாக வைக்கப்பட்ட அலிசாகிர் மௌலானாவின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையையும் அகற்றுமாறு முதல்வர் கட்டளையிட்டதை தொடர்ந்து அங்கிருந்த பதாதை அகற்றப்பட்டு உரிய பதாதை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

No comments: