News Just In

11/10/2019 08:36:00 PM

நுளம்புகளால் பரவிவரும் காய்ச்சல்கள் - மக்கள் அவதானம்!

மழை காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது நுளம்புகள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன.

இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். நுளம்புகள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற நுளம்புகள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த இடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. 

ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்கு பெரிதாக தெரியாது. அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம். ஆனால், டெங்கு காய்ச்சலுக்கு காரணமான நுளம்புகள் அதில் முட்டை இட்டு உற்பத்தி ஆகக்கூடும். நுளம்பு கடியில் இருந்து காப்பாற்றி கொள்ள ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும். மேலும், படுக்கையில் நுளம்புவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். நுளம்புகள் மூலம் பரவிவரும் இடங்கள்தொடர்பில் அனைவரும்  அவதானத்துடன் செயற்படவேண்டும்.

காலநிலை மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். 

சூழலை சுத்தமாக வைத்திருப்போம்! 
சுகமாக வாழ்வோம்!!

No comments: