News Just In

11/11/2019 11:12:00 AM

கின்னஸ் சாதனை படைக்கவுள்ள இலங்கை இரட்டையர்கள் அமைப்பினர்

இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இரட்டையர்கள் அமைப்பினால் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி உலக நாடுகளிலுள்ள இரட்டையர்களை இலங்கைக்கு அழைத்து மாநாடு நடத்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் 28,000 உறுப்பினர்களோடு பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற இரட்டையர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் .

இதன் மூலம் உலகில் அதிகளவிலான இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டம் ஒன்றை நடத்தி கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர்.

இது தொடர்பாக அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இரட்டையர்களின் கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த அமைப்பில் இப்போது 28,000 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக இலங்கை இரட்டையர் அமைப்பின் தலைவர்களான உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

அனைத்து இனங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கும் இந்த அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த உலக சாதனையை நனவாக்குவதற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இரட்டையர்கள் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் இலங்கைக்கு வந்தடைவார்களெனவும் அவர்கள் 8 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்களெனவும் இலங்கை இரட்டையர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது .

No comments: