News Just In

11/20/2019 12:55:00 PM

நகர பிதாவின் உலக சிறுவர் தினச் செய்தி - மட்டு மாநகரை கட்டமைக்க சிறுவர்கள் ஆலோசனை வழங்கலாம்


அன்புக்குரிய சிறுவர்களே,

ஒரு நகர பிதாவாக, உங்கள் அனைவருக்கும் எனது இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த ஆண்டின், இந்த நாள், அதாவது நவம்பர் 20 ஆம் திகதி, அதி சிறப்பு வாய்ந்ததொரு நாளாக அமைகின்றது. சிறுவர் உரிமைகள் சாசனம் உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகால நிறைவினை இன்றைய நாள் குறித்து நிற்பதுடன் கடந்த 30 வருடங்களாக உலகெங்கிலும் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு மேற்படி சிறுவர் உரிமைகள் சாசனம் பெருமளவு பங்காற்றியுள்ளது.

இந்த நாள் உங்களின் அனைத்து உரிமைகளையும் நீங்கள் அடைந்துகொள்ளுகின்றீர்கள் என்பதை உறுதிபடுத்துவதற்கு தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் நாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டினை எமக்கு நினைவூட்டுகின்றது. இந்த உரிமைகளில் பின்வரும் சிறப்பம்சங்களை உள்ளடக்கியதொரு சூழலில் வளருவதற்கு நீங்கள் கொண்டுள்ள உரிமையையும் உள்ளடங்குகின்றது.

- பாதுகாப்பானதொரு சூழலில் வாழுகின்றோம் எனும் உணர்வு;

- அடிப்படை சேவைகளையும் மாசற்ற நீர் மற்றும் வளியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு;

- விளையாடவும், கற்றுக்கொள்ளவும் வளரவும் வாய்ப்பிருத்தல்:

- உங்கள் கோரிக்கைகள் தேவைகள் போன்றவற்றின் குரல் மற்றையவர்களை சென்றடைதல் மற்றும் அதற்கு முக்கியத்துவம் கிடைத்தல்.

மட்டக்களப்பு மாநகர சபை என்ற வகையில் நாங்கள் உங்கள் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் இந்த மாநகர சபையின் ஆளுகைப் பிரதேசத்தை நாட்டின் முதலாவது சிறுவர் நேயமிக்க ஆளுகைப் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கு நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த உன்னதமான முயற்சியில் நாங்கள் யுனிசெப் அமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். உலக சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்கு மாநகர ஆளுகைப் பிரதேசத்தில் பல நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு மாநகர சபை திட்டமிட்டுள்ளது.

உங்களின் நகர பிதாவாக, இந்த சிறப்பான தருணத்தில், இந்த நகரத்தை சிறப்பாகவும், உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் நட்புறவுமிக்கதாகவும் மாற்றியமைப்பது எப்படி என்பதைப் பற்றி உங்கள் ஆலோசனைகளை அறிய விரும்புகிறேன்.

மட்டக்களப்பு மாநகர சபை என்ற வகையில் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பானதும், அனைவரையும் உள்வாங்குகின்றதும், ஆரோக்கியமான மற்றும் பசுமையானதுமான மட்டக்களப்பை உருவாக்க கடமைப்பட்டுள்ளோம். நீங்களே எமது எதிர்காலம். ஆகவே, எமது சமூக கடமைகளின் போது சிறுவர்களின் நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்கு மட்டக்களப்பு நகராட்சியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு எங்கள் சமுதாயம், அபிவிருத்தி பங்காளிகள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிட்கு அழைப்பு விடுக்கின்றேன்.

நீங்கள் கூறும் விடயங்களை செவிமடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதுடன், இந்த முயற்சியில் தீவிரமாக பங்கேற்பதன் மூலமும் உங்கள் “பெறுமதிமிக்க கருத்துக்களை” பகிர்ந்துகொள்வதன் மூலமும் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் யோசனைகளை “Tell to mayor”: complaints.lk எனும் பிரயோகத்தின் வாயிலாக அல்லது முகநூல்(Facebook: Municipal Council Batticaloa) பக்கத்தின் வாயிலாக அல்லது நகரத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிகளின் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.

சிறுவர்களின் ஆலோசனைகளை  பெறுவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (20) மாநகர சபையில் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள யுனிசெப் மற்றும் மாநகர சபை இணைந்து ஆலோசனைப் பெட்டியினை அறிமுகப்படுத்தினர்.









No comments: