
க.பொ.த (உ/த) 2020 இல் கல்வி கற்கும் கணித , விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தினை கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம் முன்னெடுத்து வருகின்றது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள கல்லடிப் பிரதேச நலன்விரும்பிகளின் நிதி உதவியுடன் மேற்படி செயற்திட்டமானது அடுத்துவரும் ஏழு மாதங்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (09.11.2019) மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் ஒன்றியத்தின் கல்விப் பிரிவு பொறுப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான திருமதி. தி. ஹரிதாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதேச உயர்தர மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஒன்றியமானது இப்பிரதேச மாணவர்களின் ஆரம்பக் கல்வி, இடைநிலைக்கல்வி என்பவற்றுடன் உயர்தரக் கல்விக்கும் உதவ முன்வந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உதவ உருவான திட்டம் தற்போது மட்டக்களப்பு மேற்கு , புதுக்குடியிருப்பு , தாழங்குடா , ஊறணி , நாவலடி , ஏறாவூர்ப்பற்று என பல இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு ஏறத்தாழ 2000 மாணவர்கள் நேரடியாக பயன்பெறுகிறார்கள்.
இதற்கு பாரிய நிதி உதவி வழங்கும் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கனடாவில் வதியும் உறவுகளின் மனப்பாங்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தமது உரையில் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலின் முடிவில் மார்கழி மாதம் மூன்றாம் திகதிமுதல் வகுப்பு நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வகுப்பில் பங்குகொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் ஒன்றிய செயலாளரான எஸ். விஜயகுமார் (தொலைபேசி இல : 077-9115565) அவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.










No comments: