தற்பொழுது நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நோய் பரவி வருவதுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் 23ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் 58,374 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 74 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,459 பேர் டெங்கு நோயாளிகளாக பதிவாகியுள்ளனர்.
2018ஆம் ஆண்டு மாத்திரம் 58 பேர் டெங்கு நோயின் தாக்கத்தால் உயிரிழந்ததுடன் 51,659 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, காலி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் 27,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 12,252 டெங்கு நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 9,549 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 5,698 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
No comments: