News Just In

10/08/2019 05:26:00 PM

மட்டக்களப்பு கல்லடியில் நகைத் திருட்டு ! சந்தேக நபர்கள் பிடிபட்டனர்

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில்  வீட்டை உடைத்து கொள்ளையிடப்பட்ட 12.5 பவுண் தங்க நகைகள்  கட்டியாக உருக்கிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகைக் கடையிலிருந்து பொலிஸாரால் நேற்று (07.10.2019) கைப்பற்றப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த மனோகிதராஜ் தினேஸ்குமார் விசாரணைகளின்போது தகவல் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில்  களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த மகேந்திரன் பிரசாந்த், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தசாமி புஸ்பராசா ஆகியோரே குறித்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டமை தெரியவந்தது. தொடர் தேடுதல் வேட்டை நடத்திய பொலிசார் யாழ்ப்பாணம் சென்று பிரதான சந்தேக நபரான கந்தசாமி புஸ்பராசாவைக் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள ராணி ஜூவலரியில் குறித்த நகைகள் உருக்கிய தங்கக் கட்டியாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்த கடை உரிமையாளரும் களுவாஞ்சிக்குடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபரான புஸ்பராசா என்பவர் ஏறாவூர் சவுக்கடியில் வீட்டை உடைத்து கொள்ளையடித்து வீட்டிலிருந்த பெண்ணையும் அவரது மகளையும் கொலை செய்தவர் எனவும்

இரண்டாவது சந்தேக நபரான பிரசாந்த் வெல்லாவெளியில் அவரது மனைவி, பிள்ளை மற்றும் மாமியாரையும் கொலை செய்தவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments: