
கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியமானது கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக நலம் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றில் குறிப்பாக மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS) வழிகாட்டலில் பல கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட கல்வி வலயங்களில் ஆரம்பப்பிரிவு கல்வியை மேம்படுத்தும் முகமாக ஆசிரியர் தரவிருத்தி செயலமர்வுகள், உயர் தரத்தில் தொழில்நுட்பக் கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் செயன்முறைக் கருத்தரங்குகள் என்பனவற்றை கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியம் (CTCT) ஊடாக இவ்வருடம் முன்னெடுத்தது.
மேலும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான தரவிருத்திச் செயலமர்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், திருக்கோவில் கல்வி வலயம், நாவிதன்வெளி கல்விக்கோட்டம், ஈச்சிலம்பற்று கல்விக்கோட்டம், வாகரை கல்விக்கோட்டம் ஆகிய இடங்களில் கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தால் (CTCT) முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்களும் பல ஆயிரம் மாணவர்களும் பயன்பெற்றனர்.
மட்டக்களப்பு கல்வி அபிவிருதிச் சங்கம் மேற்படி செயற்பாடுகளுக்கப்பால் புலம்பெயர் தேசங்களில் வாழும் உள்ளூர் நன்கொடையாளர்களான கந்தையா புருசோத்தமன் (கல்லடி), மாணிக்கம் இராசரெத்தினம் (தேத்தாத்தீவு), பாக்கியராஜா கமலநாதன் (தேத்தாத்தீவு), G.N.M Promo.com உரிமையாளர் பாலசுப்பிரமணியம் விமலநாதன் (கல்லடி) ஆகியோரின் நிதி உதவியுடன் வார இறுதி நாள் வகுப்புக்கள், மாதாந்த மாதிரிப் பரீட்சைகள் என்பனவற்றையும் நடாத்தியது.
இது மட்டுமன்றி CTCT இன் நிதியுதவியுடன் பரீட்சைக்கு முந்தைய காலத்தில் மிகச்சிறந்த வளவாளர்களைக் கொண்டு விசேட கருத்தரங்குகளையும் நடத்தியது.
அண்மையில் வெளியான தரம் 5 (2019) பெறுபேற்றின் பிரகாரம் ஒன்றியத்தின் மேற்படி செயற்பாடுகளுக்கு சிறந்த பலன் கிடைக்கப்பெற்றுள்ளது. திறமையான வசதி குன்றிய பல மாணவர்கள் அரசின் நிதி உதவியினை பெற முடிந்துள்ளது.
மேற்படி பிரதேசங்களின் பெறுபேற்றில் CTCT, EDS, அபிவிருத்தி ஒன்றியம் ஆகியன தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது. அதே வேளை தனிப்பட்ட முறையில் நிதியுதவி வழங்கிய நன்கொடையாளர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
எதிர்வரும் புலமைப் பரீட்சைக்கு (2020) மாணவர்களைத் தயார் படுத்தும் செயன்முறைகளை EDS ஊடாக ஒன்றியம் ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மேற்கு வலயம், ஏறாவூர் பற்று கல்விக் கோட்டம், ஊரணி, நாவலடி, EDS, புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான வகுப்புக்கள், மாதாந்த மாதிரிப் பரீட்சைகள், விசேட கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் நேரடியாக 1800 மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.
இதற்கான நிதியுதவியினை கனடாவில் இருந்து வழங்க முன்வந்த பாலசுப்பிரமணியம் விமலநாதன் (கல்லடி), கமலநாதன் பாக்கியராஜா (தேத்தாத்தீவு), சின்னத்துரை விஜயகுமார் (நல்லையா வீதி), சின்னத்துரை சாந்திக்குமார் (நல்லையா வீதி), சாள்ஸ் நிமலராஜன் (மட்டக்களப்பு), பாலசுப்பிரமணியம் நேசதுரை (போரதீவு) ஆகியோருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
சில கல்விக்கோட்ட பிரதேசங்களில் ஆசிரியர்களின் தரவிருத்தியை மேம்படுத்த பொருத்தமான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்த கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியத்திற்கும் விசேட பாராட்டுக்கள்.
No comments: