மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் குடும்ப பெண் ஒருவர் தகாத உறவின் மூலம் குழந்தையை பிரசவித்து வீட்டுக்கு அருகில் புதைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி பத்தினி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரின் கணவர் 3 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தொழில் புரிந்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்தார். குறித்த பெண்ணிற்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக பெண்ணின் கணவரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று பெண்ணின் கணவர் தொழிலுக்கு வெளியில் சென்ற நிலையில் குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண்ணுக்கு மாமியார், பெண்ணின் தாயார், சகோதரி ஆகிய மூவரும் இணைந்து பிரசவம் பார்த்தனர். இதன்போது அவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இதன் பின்னர் குறித்த சிசுவை துணி ஒன்றினால் சுற்றி கோயிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் புதைத்துள்ளனர். இதன் பின்னர் குழந்தையை பிரசவித்த தாய் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண்ணின் சகோதரி, தாயார் மற்றும் கணவனின் தாயார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் குறித்த பெண் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

No comments: