News Just In

10/16/2019 08:47:00 PM

நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினரை கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா கோரிக்கை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம் பிரியா தம்பதியினர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளை அவர்கள் ஏற்கனவே வசித்த இடத்திற்கு செல்ல அனுமதி வழங்குமாறு அவுஸ்திரேலிய அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் குறித்த தமிழ் குடும்பத்தை கிறிஸ்மஸ் தீவின் தடுப்புக்காவலில் இருந்து வெளியேற்றி, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அவர்கள் ஏற்கனவே வசித்த பிலோலா பகுதியிலுள்ள வீட்டிற்கு திரும்புவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை  கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினரின் சட்ட ரீதியான விடயங்கள் முடிவடையும் வரை அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலே தங்கியிருக்க வேண்டுமென அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கானது டிசம்பர் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி சிறப்பு விமானமொன்று நடேசலிங்கம் பிரியா தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளை இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. 

நாடு கடத்தப்படுவதற்கு தயாரானபோது, மெல்பேர்ன் நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக நாடுகடத்தல் தொடர்பில் முழுமையான விசாரணை முடியும் வரை அவர்களை நாடுகடத்த முடியாது என்பதால் விமானம் தரையிறக்கப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

இந் நிலையில் இவர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: