
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றுகூடல் மற்றும் ஊடக சந்திப்பு இன்று (13) மட்டு - காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
பட்டதாரிகள் தமது வேலையின்மை பிரச்சினைகளை முன்வைத்து கருத்துக்களைத் தெரிவித்தனர். இதன்போது உரையாற்றிய மட்டு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் க.அணிரதன் அவர்கள்
ஒவ்வொரு கால கட்டத்திலும் வேலையற்ற பட்டதாரிகள் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே எங்களை தொடர்ந்து ஏமாற்றும் இந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலினை நாங்கள் புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் நாங்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்று முடிவு செய்ய வேண்டாம்.
வேலையினைப் பெற்று எங்களை இவ்வளவு வருட காலமாக கஸ்ரப்பட்டு படிக்க வைத்த எமது பெற்றோர்களை காப்பாற்ற வேண்டுமென்பதே எமது விருப்பம் இருப்பினும் அது முடியவில்லை.
அரசாங்கமானது கல்வித் திட்டத்தினை இவ்வாறு வகுத்துவிட்டு அதன் வழியே படித்து பட்டம் முடித்த எங்களை புறக்கணிப்பது நியாயமில்லை. இவ்வாறு புறக்கணிக்கும் போதே நாங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகின்றது.
தற்போது O/L மற்றும் A/L முடித்த மாணவர்களுக்கு கூட நியமனங்களை வழங்கி பட்டதாரிகளை புறக்கணித்திருக்கின்றனர். குறிப்பிட்ட சில அமைச்சர்கள் உள்ளொன்றும் புறமொன்றும் கூறி எங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலையினை இல்லாமல் செய்திருக்கின்றனர் .
அமைச்சர்கள் நிரந்தரமானவர்கள் இல்லை. தேர்தல் காலங்களில் அவர்கள் மாற்றமுறுவார்கள். தற்போதைய நிலையில் அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம் அல்லது எங்களது பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுத்தர உறுதியளிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு தெரிவுப்போம் எனக் கூறினார்.
No comments: