News Just In

10/14/2019 09:30:00 AM

இரண்டு மணி நேரத்திற்குள் 42 கிலோ மீற்றர் மரதன் ஓடி முடித்த உலகின் முதல் மனிதன்

உலக மரதன் ஓட்டத்தில் பல சாதனைகளை முறியடித்த நடப்பு ஒலிம்பிக் சம்பியனான கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்சோஜ் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்களுக்குள் ஓடி முடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நேற்று முன்தினம் (12) நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலயம் 59 நிமிடங்கள் 40 செக்கன்களில் ஓடி முடித்தார்.

இதன்மூலம் அவர் 2 மணித்தியாலங்களுக்குள் மரதன் ஓட்டப் போட்டியொன்றை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் சம்பியனான 34 வயதுடைய எலியுட் கிப்சோஜ், 2018ஆம் ஆண்டு ஜேர்மனியின் பேர்ளின் நகரில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் ஒரு நிமிடம் 39 செக்கன்களில் ஓடி முடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

அந்த சாதனையை சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு அவரே முறியடித்திருந்ததுடன், 2 மணித்தியாலங்களுக்குள் மரதன் ஓட்டப் போட்டியொன்றை நிறைவு செய்த உலகின் முதல் மனிதர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

எனினும் குறித்த போட்டியானது சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக இடம்பெற்றதால் எலியுட் கிப்சோஜின் சாதனையை ஏற்றுக்கொள்ள முடியுமா என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் ஆராய்ந்து வருகிறது. இதனால் அவருடைய இந்த தூரப் பெறுமதி இதுவரை உலக சாதனையாக அறிவிக்கப்படவில்லை.

No comments: