News Just In

7/16/2026 03:45:00 PM

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்!

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர் : மன்னிப்புக் கடிதம் சமர்ப்பித்த பின்னரே வாகனங்கள் விடுவிப்பு – சம்மாந்துறை நீதிவான் கடும் எச்சரிக்கை


நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள்களை முன்சக்கரத்தை உயர்த்தி (Wheelie) ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சம்மாந்துறைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் மன்னிப்புக் கடிதங்களை வழங்கி, அவை உரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் மேலொப்பத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விடுவிக்கப்படமாட்டாது என்று சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் கௌரவ நூர்தீன் சர்ஜுன் இன்று (16) உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு இன்று நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றது.

குறித்த இளைஞர்கள் தாங்களே ஆபத்தான சாகசங்களை மேற்கொண்ட காணொளிகளை டிக்டொக் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருந்தமை விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்ததுடன், அவற்றின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்வர் சியாத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பொதுமக்களுக்கு அசௌகரியம் மற்றும் உயிர் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான சாகசங்கள் மேற்கொள்ளப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிவான், குற்றச்சாட்டுக்குட்பட்டோரின் பெற்றோர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கும் கடுந்தொனியில் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெற்றால் இதைவிடக் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் தண்டனைகளும் விதிக்கப்படும் என்றும் நீதிவான் எச்சரித்தார். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட சில இளைஞர்கள் நீதிவானின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு முன்னாலும் இதேபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இவ்வாறான சம்பவங்களை நீதிவான் ஏற்கனவே அவதானித்திருந்தமையும், அதனால் இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொது வீதிகள் அனைத்து மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்தாகும் என்பதையும், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து பொறுப்புடன் வீதிகளைப் பயன்படுத்துவது ஒவ்வொரு சாரதியினதும் கடமையாகும் என்பதையும் நீதிவான் வலியுறுத்தினார் என்று தெரிவித்தார்.

No comments: