News Just In

7/16/2026 03:41:00 PM

தமிழ்–முஸ்லிம்–மலையக அரசியல் ஒத்துழைப்பில் முஸ்லிம் உரிமைகளுக்கு என்ன உத்தரவாதம்? – யூ.எல். உவைஸ் கேள்வி

தமிழ்–முஸ்லிம்–மலையக அரசியல் ஒத்துழைப்பில் முஸ்லிம் உரிமைகளுக்கு என்ன உத்தரவாதம்? – யூ.எல். உவைஸ் கேள்வி


நூருல் ஹுதா உமர்
கல்முனை முஸ்லிம் பெரும்பான்மையிலிருந்து தமிழர்கள் பிரிந்து செல்வதற்கு போராட்டம் நடத்துகிறார்கள். மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள் தனித்தனியாக பெற்றுக்கொள்வதில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றது என்பது நாம் அறியாத விடயங்கள் அல்ல. இப்படியான சூழ்நிலைகளில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் சமூகங்கள் சார்ந்த பொதுவான விடயங்களில் ஒன்றித்து புரிந்துணர்வுடன் நடக்க முடியுமா ? என அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் யூ.எல். உவைஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகள் ஒன்றித்து பயணித்து நமது நாட்டிற்கும் நாட்டில் வாழும் மக்களிற்கும் நன்மைகளும் சமூகங்களின் நலன்களும் பெற்றுக்கொடுக்க இதய சுத்தியுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு பிராத்திப்போம். தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளிடம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் பெற்றுக்கொள்வதற்காக இனப்பிரச்சினைக்கான தீர்வில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாண சபையை உருவாக்கி நிரந்தரமான முஸ்லிம் முதலமைச்சரை சட்ட ரீதியாக உருவாக்குவதற்கு உங்களின் நிலைப்பாடு என்ன? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், கல்முனைத்தொகுதி, சம்மாந்துறைத்தொகுதி, பொத்துவில் தொகுதி மூன்று தொகுதிகளையும் உள்ளடக்கிய கரையோர மாவட்டத்தை சட்டரீயாக பிரகடணப்படுத்துவதற்கு உங்களின் நிலைப்பாடு என்ன? அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்களாக தகுதிவாய்ந்த இரண்டு முஸ்லிம்களை பெற்றெடுப்பதற்காக உங்களின் நிலைப்பாடு என்ன? 9 மாகாணங்களில் 7 மாகாணங்களின் பெரும்பான்மை சிங்கள மக்களின் 7 முதலமைச்சரும், மாகாண சபையும் அமையும் வடக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சரும், பெரும்பான்மை தமிழ் மாகாண சபையும் அமையும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரும், முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபையும் அமைய வேண்டும்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற எல்லா மாவட்டங்களிலும் சிங்களவர்கள் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டத்திலும் தமிழர்கள் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஏன் தகுதி வாய்ந்த முஸ்லிம் அரசாங்க அதிபர்களை நியமிக்க முடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டம் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டம் தமிழர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் முஸ்லிம் மலையக அரசியல் கட்சிகள் தங்களது சமூகம் சார்ந்த பொதுவான விடயங்களை ஒன்றிணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சில செய்திகள் வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

முஸ்லிம்களின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் பெற்றெடுப்பதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் இன்று வரை முஸ்லிம் சமூகத்திற்கு என்ன உரிமைகளையும், அபிலாஷைகளையும் பெற்றுத்தந்துள்ளார்கள் என்பதை மக்கள் நீதிமன்றத்தின் முன் வந்து பகிரங்கப்படுத்துவார்களா? தமிழ் கட்சிகள் வடகிழக்கை இணைத்து தமிழ் ஈழம்/ சமஷ்டி ஆட்சி முறையை கோரி நிற்கின்றார்கள். இதில் முஸ்லிம் சமூகத்திற்கான தீர்வு இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

வடகிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில் தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடியாமல் அக்கரைப்பற்று நிர்வாகப் பகுதிகளிலிருந்து திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச சபைகள் தமிழ் மக்கள் பிரித்து எடுத்துள்ளார்கள். நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபையிலிருந்து தமிழர்களுக்காக காரைதீவு பிரதேச சபை பிரிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பாண்மை பிரதேச சபையிலிருந்து தமிழ் மக்களுக்காக அன்னமலை நாவிதன்வெளி பிரதேச சபை பிரித்து எடுக்கப்பட்டது என்பதையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments: