இலங்கையின் மிகப் பெரிய மீன் மொத்த விற்பனை நிலையங்களுள் ஒன்றாக விளங்கும் காரைதீவு பிரதேசத்தின் மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தைகளில் நிலவும் மீன்வாடி முறைமையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஹில்மி, பொது சுகாதார பரிசோதகர்கள், காரைதீவு பொலிஸார், பல்வேறு திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மீன் மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான கிலோகிராம் மீன்கள் விநியோகிக்கப்படும் மையமாக மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தை விளங்கிவருகிறது. இதனால் அப்பகுதி மீன்பிடித் தொழிலும் மீன் வணிகமும் பிராந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனினும், மீன்வாடி நிர்வாகம், சுகாதார நடைமுறைகள், கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு மீன் வியாபார நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்துவதுடன், சுகாதார தரங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டத்தில் கருத்து வெளியிட்ட மீன் மொத்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், மீன்வாடி தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள், போக்குவரத்து வசதிகள், கழிவுகளை அகற்றுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் தங்களது துறைகளின் பொறுப்புக்கள் மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகள் குறித்து விளக்கமளித்ததுடன், மீன்வாடி நடவடிக்கைகள் சட்டபூர்வமாகவும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், மாளிகைக்காடு மற்றும் காரைதீவு மீன் சந்தைகள் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் முக்கிய வர்த்தக மையங்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார். எனவே மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும், பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அனைவரின் ஒத்துழைப்புடன் ஒரு ஒழுங்குமுறைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மீன்வாடி முறைமையை நவீனமயப்படுத்துவதற்கும், சுத்தமான மற்றும் நிலையான மீன் சந்தை சூழலை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கலந்துரையாடலின் இறுதியில், மீன் சந்தைகளின் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகளை மேலும் ஒழுங்குபடுத்துவதற்காக அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பரிந்துரைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
No comments: