News Just In

6/12/2026 11:27:00 AM

இறக்காமம் முன்பள்ளிகளில் சிறுவர் விளையாட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள்!

இறக்காமம் முன்பள்ளிகளில் சிறுவர் விளையாட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள்


நூருல் ஹுதா உமர்

“விளையாட்டை காப்போம் – பிள்ளைப் பருவத்தை காப்போம்” (Protect Play – Protect Childhood) என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச விளையாட்டு தினம் நேற்று (11) நாடு முழுவதும் உள்ள முன்பள்ளிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் வழிகாட்டலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, இறக்காமம் 03ஆம் பிரிவில் அமைந்துள்ள பிரில்லியன்ட் பாலர் பாடசாலையில் விளையாட்டு மற்றும் சுற்றாடல் தின நிகழ்வு நடைபெற்றது. இதில் இறக்காமம் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும், அல்-மதீனா பாடசாலையின் அதிபர் கே. றஸ்மி, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் மற்றும் மகளிர், சிறுவர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.

நிகழ்வின் போது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். எச். வஹாப் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

அதேவேளை, உதவிப் பிரதேச செயலாளர் அய்மா நிஃமத்துல்லா, “இலட்சிய தாய்” கொண்டிருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மற்றும் குடும்பத்தில் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கான பெற்றோரின் பொறுப்புகள் தொடர்பிலும் உரையாற்றினார்.

நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள், அபிநயங்கள் மற்றும் மகிழ்ச்சியான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள் பாலர் பாடசாலை ஆசிரியர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றன.

No comments: