விலங்குவழி தொற்று நோய்கள் குறித்து கல்முனையில் விழிப்புணர்வு செயலமர்வு
மனிதர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான தொற்று நோய்கள் விலங்குகளிடமிருந்தே பரவுகின்றன என்ற பின்னணியில், விலங்குவழித் தொற்று நோய்கள் (Zoonotic diseases) குறித்து சுகாதாரத் துறையினருக்கு தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று நேற்று (18) நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் ஜே.எம். நௌசாத், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ. ரிஸ்னின் , பிராந்திய தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். ஹில்மி மற்றும் கால்நடை வைத்தியர் எஸ்.எம். நபீர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
தற்போதைய சூழலில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய விசர்நாய்க்கடி, எலிக்காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் போன்ற நோய்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
விசர்நாய்க்கடி தொடர்பில் செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசியின் அவசியம் மற்றும் விலங்கு கடித்தவுடன் மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் விளக்கப்பட்டன. எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயக் குடியேற்றங்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் பணிபுரிவோர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிபா வைரஸ் தொடர்பில் வௌவால்கள் கடித்த அசுத்தமான பழங்கள் மூலம் பரவக்கூடிய ஆபத்துகள் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விளக்கமளிக்கப்பட்டன.
விலங்குவழி நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தடுப்பதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
No comments: