நூருல் ஹுதா உமர்
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரசாங்க சேவைகளை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் மேம்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகளையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (19) இடம்பெற்றது.
இத்திட்டத்திற்கான முன்னோடி நடவடிக்கையாக The Global Fund நிறுவனத்தின் பிரதிநிதிகள் வைத்தியசாலைக்கு வருகை தந்து, வைத்திய அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு, திட்டத்தின் நடைமுறை அம்சங்கள், தேவையான தொழில்நுட்ப வசதிகள், செயல்படுத்தும் கட்டங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், வைத்தியசாலையின் சேவைத்திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு பெறும், தகவல் முகாமைத்துவ முறைகள் நவீனமயமாக்கப்படும், நிர்வாக நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும், பொதுமக்களுக்கு வேகமான, திறமையான மற்றும் பயனுள்ள டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படும்.
இம்முயற்சி, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையை நவீன சுகாதார சேவைகளின் முன்னோடியாக மாற்றுவதோடு மட்டுமல்லாது, நாட்டின் டிஜிட்டல் மாற்றப் பயணத்திற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
No comments: