News Just In

2/20/2026 09:33:00 AM

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை புறக்கணிக்கும் NPP அரசு!. இரா .சாணக்கியன்

 மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை புறக்கணிக்கும் NPP அரசு.


இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கேள்வி பதிலுக்கான நேரத்தின் போது பாரிய சவால்களுக்கு மத்தியில் எமது விவசாயிகள் சார்ந்த எனது கேள்வி ஆனது முன் வைக்கப்பட்டது 19.02.2024 . தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் என்னால் முன் வைக்கப்பட்டது அதற்கான பதிலை அமைச்சர் தனக்கு இரண்டு கிழமையில் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மட்டக்களப்பு விவசாயிகள் பற்றி அக்கறை இன்மையுடன் செயல்படுகின்றது இவ் அரசு. இவ் தேசிய பிரச்சனையில் முக்கியமாக பாதிக்கப்படுவது எமது மட்டக்களப்பு மாவட்டமே ஆகும்.

இதில் முதலாவது பிரச்சனை மகாவலி அதிகார சபையில் நீர்ப்பாசன திட்டங்களை முன்னெடுக்க முனைவதால் காடுகள் அழிக்கப்பட்டு காடுகளில் உள்ள யானைகள் மக்களின் குடியேற்ற பிரதேசங்களுக்குள் நுழைந்து மக்களுக்கு பல இழப்புகளை மற்றும் இன்னல்களை ஏற்படுத்துவது வழமையாக நடைபெற்று வருகின்றது.

மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகின்றதோ இல்லையோ யானைகள் தான் வருகின்றது தற்சமயம் நடந்த வாழைச்சேனை அசம்பாவிதம் அனைவரும் அறிந்ததே.

அடுத்த விடயம் மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகின்றதோ இல்லையோ அவ் திட்டத்தை பயன்படுத்தி பாரிய அளவில் மண்ணகழ்வு இடம் பெறுகின்றது இதனால் இதனது தாக்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதார பகுதிகள் முற்று முழுதாக வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வயல் வெட்டும் இவ் நேரங்களில் கூட நெல்லை காய வைக்க முடியாமல் ஈர நெல்லை 5000 ரூபாய்க்கு கூட விக்க முடியாமல் பாரிய சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

மட்டக்களப்பு விவசாய அமைப்புகளின் மாவட்ட சம்மேளனகோரிக்கைகளுக்கு அமைய தொடர்ச்சியான கனமழை மற்றும் முன்னதாக ஏற்பட்ட புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக கரடியனாறு, வந்தாருமுலை, கிரான், வாழைச்சேனை உள்ளிட்ட விவசாய சேவை பிரிவுகளில் பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிவாரணம் பெற முயன்றபோது, 13 பெப்ரவரி 2026 அன்று காப்பீட்டு காலம் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் நிவாரணம் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், அவசர சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்தேன்.

என்னால் எனது மாவட்ட மக்களுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகள்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) கீழ் கேள்விகள்
கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரை கேட்பதற்காக மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப்பகிர்வு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் குடிப்பரம்பல் மீது ஏற்படும் தாக்கம் தொடர்பானது.

பல தசாப்தங்களாக, மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நில ஒதுக்கீடு மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட உள்ளுர் சமூகங்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுநிருபத்தின் கீழ் அரசகாணி ஒதுக்கீடு செய்யும் போது தேசிய இன விகிதசாரம் பேணப்படவில்லை, அதனால் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் இனவிகிதாசாரப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகின்றது எனும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மைக் காலங்களில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறும் கிவுல் ஓயா திட்டத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் மயிலத்தமடு மற்றும் மாதவனை போன்ற மேய்ச்சல் தரைநிலங்களின் பிரச்சினைகள், குடியேற்றக் கொள்கை, மற்றும் நீர்ப்பாசன உள்ளிட்ட வளங்களின் சமமான அணுகல் குறித்து பொதுமக்களின் கவலை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயமாக கௌரவ அமைச்சரிடமிருந்து பின்வரும் விளக்கங்கள் கோரப்படுகின்றன:

1) 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், அட்டவணை 9 நிரல் ஐ பின்னிணைப்பு ஐஐ வகை 18 உறுப்புரை 2.5இல், அரச நிலங்களைப் பகிர்ந்தளிக்கும் போது தேசியஇன விகிதம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசியஇன விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட நிலங்களின் அளவை, இன ரீதியான விபரங்களுடன் தெரிவிக்கவும்.

2) மகாவலி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள நிலத்தின் மொத்த அளவு (ஏக்கரில்) எவ்வளவு? மேலும், தேசியஇன ரீதியாக பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

3) வடக்கு மாகாணத்தில் கிவுல் ஓயா திட்டத்திற்காக எத்தனை ஏக்கர் காணி மாகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழிருந்து பெறப்படுகின்றது? வடக்கு பிராந்தியத்திலிருந்து இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன, மேலும் எத்தனை குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தெரிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட முறைமை என்ன?

4) மயிலத்தமடு மற்றும் மாதவனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்ற உள்ளுர் மக்களால் முன்பு பயன்படுத்தப்பட்ட காணியில் எவ்வளவு பகுதி மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது?

5) கிவுல் ஓயா திட்டத்திற்காக 13,000 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அவ்வாறாயின் மயிலத்தமடு மற்றும் மாதவனை விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்காக மகாவலி “எல்” வலயத்தில் இருந்து 3000 ஹெக்ரேயர் காணியினை விடுவிப்பதில் உள்ள பிரச்சினை என்ன?

6) மகாவலி “கே” வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதுடன், இந்த “கே” வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன?

7) நில ஒதுக்கீட்டு கொள்கைகள் காரணமாக மக்கள் அமைப்பில் மாற்றம் அல்லது உள்ளுர் தேசிய இனங்களின் இடம்பெயர்வு மற்றும் புறக்கணிப்பு ஏற்படாமல் இருக்க அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

இவற்றுக்கான பதில்கள்அரசிடம் இருந்து என்று கிடைப்பது மக்களின் பிரச்சனைகளை நாம் எவ்வாறு தீர்ப்பது.

No comments: