(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு நகர மத்தியில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்மாப் பள்ளிவாசல் ஜமா அத்தார் சங்கத்தின் அமர்வு மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூக சேவை அலுவலர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மாவட்ட காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினரும் ஜமாஅத்தார் சங்க பொதுச் செயலாளருமான எம்.எஸ்.எம். அப்துல் காதரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.
குறிப்பாக எதிர்காலத்தில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்பும் வண்ணம் ஒருங்கிணைந்த வகையில் அனைத்து சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலையும் அதன் சொத்துக்களையும் பாதுகாத்து அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்மொழியப்பட்டன.
இது விடயமாகக் கருத்துத் தெரிவித்த மண்முனைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர் சிவானி சிவநாயகம் அமைப்பின் செயற்திட்ட அறிக்கைகள். கணக்கறிக்கைகள், பொதுக்கூட்ட அறிக்கைகள் கிரமமாகப் பேணப்பட வேண்டும். மேலும், அடையாளம் காணும் நலன்புரி உதவிகள் தேவையானோருக்கு யாப்பு விதிகளுக்கு அமைவாக இன நல்லுறவின் அடிப்படையில் நலன்புரி உதவிகளைச் செய்தால் சிறப்பாக இருக்கும். அதுபற்றியும் இந்த அமைப்பு திட்டங்களை வகுத்துச் செயற்படலாம். எங்கள் அலுவலகத்துக்கும் நலன்புரி உதவி கேட்டு ஆதரவற்றோர் வருவதுண்டு அப்படிப்பட்டவர்களுக்கும் இந்த அமைப்பினால் உதவ முடிந்தால் அது வரவேற்கத்தக்கது” என்றார்.
இந்த அமர்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்களான நிலக்சி நிருஷன், நிருஜா கிரிஷாந்தன் உட்பட ஜமா அத்தார் சங்க நிருவாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசனைக் குழுவினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
17ஆம் நூற்றாண்டின் சகாப்தத்தில் நிறுவப்பட்ட மட்டக்களப்பு நகரப் பள்ளிவாசல், அதன் தொடக்கத்தில், 1920 முதல் 1971 வரை இலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளியினரான சொலுக்கர்களின் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டது, மேலும், அவர்கள் பள்ளிவாசலையும் அதன் அசையும், அசையாச் சொத்துக்களையும் உள்ளுர் மக்களான அறங்காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.
இன்று வரை சரித்திரபூர்வமாக இயங்கி வரும் மட்டக்களப்பு நகரப் பள்ளிவாசல், நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் இன நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்; வாழும் தமிழ் முஸ்லிம் சமூக நல்லுறவின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.
No comments: