News Just In

2/10/2026 06:22:00 AM

யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

யாழில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்.. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி




இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதானவர் என தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அல்லைபிட்டிப் பகுதியில், கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் இரிவுக்குட்பட்ட அல்லைப்பிடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனம் ஒன்று, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது.

குறித்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர். ஆனால் பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவேகமாக சென்றுள்ளது.

சென்ற வாகனம் மீண்டும் பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்ததை அவதானித்த பொலிஸார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த நபரை பொலிஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: