News Just In

2/01/2026 01:06:00 PM

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக? – அரசியல் இழுபறியை நிறுத்தி மக்களுக்கு உடனடி பகிர்ந்தளிப்பு வேண்டும்

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக? – அரசியல் இழுபறியை நிறுத்தி மக்களுக்கு உடனடி பகிர்ந்தளிப்பு வேண்டும்
நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் சிதைக்காமல் மக்களிடம் உடனடியாகப் பகிர்ந்தளிக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடில்லாத ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் உயரிய இலக்குடன் வழங்கப்பட்ட இந்த திட்டம், இன்று அரசியல் இழுபறிகளுக்கும் அதிகாரப் போட்டிகளுக்கும் பலியாகி நிற்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நன்கொடைகளின் மீதான சர்வதேச நம்பிக்கையை பாதிக்கும் வகையில், குறித்த வீட்டுத்திட்டம் தாமதப்படுத்தப்படுவதும், உரிய பயனாளர்கள் அடையாளம் காணப்படாமல் இருப்பதும் கடந்த அரசாங்கங்களினதும், இந்த அரசினதும் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய இந்த மனிதாபிமான உதவி, அரசியல் லாபத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும், எந்தவித பாகுபாடுமின்றி தகுதியுடைய மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, இலங்கை அரசாங்கம் இனியும் காலம் இழுக்காமல், நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பான அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திட்டத்தை அதன் அசல் நோக்கத்திற்கிணங்க மக்களிடம் உடனடியாக கையளிப்பதற்கு தீர்மானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி அரசை கேட்டுக்கொண்டுள்ளது

No comments: