
காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. சுமார் 120-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் காங்கோவின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.
காங்கோவின் வடக்குப் பகுதியில் எம்23 என்ற கிளர்ச்சிக் குழு செயல்படுகிறது. இந்த குழு கோமா, ரூபையா உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. எம்23 கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ரூபையாவில் மிகப்பெரிய சுரங்கம் செயல்படுகிறது. அங்கு கோல்டான் என்ற கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது.
இது செல்போன், கணினி, விமான பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ரூபையா சுரங்கத்தில் சுமார் 4,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை. அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து காங்கோவில் பணியாற்றும் சர்வதேச தொண்டு அமைப்பினர் கூறும்போது, ”எம்23 கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு இல்லை. தொழிலாளர்கள் தங்கள் விருப்பம் போல சுரங்கம் தோண்டுகின்றனர். காங்கோ சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை ஐ.நா.சபை உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.
No comments: