நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நளீர் பௌண்டஷன் தலைவர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் அபூபக்கர் நளீர், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
விழாவின் போது உரையாற்றிய பிரதம அதிதி, சிறுவயதிலேயே கல்வி அடித்தளத்தை உறுதிப்படுத்துவது குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். கல்வி என்பது சமுதாய மாற்றத்திற்கான சிறந்த ஆயுதம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வின் போது பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று விழாவை மேலும் சிறப்பாக்கின. இதனுடன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு நிகழ்வுக்கு உற்சாகம் அளித்தனர்.
இந்நிகழ்வு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியையும், கல்வி மீதான ஆர்வத்தையும் அதிகரித்ததாக நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மேலும் ஐக்கிய மக்கள் முன்னணியின் செயலாளர் ஜொகநாதன், நிர்வாக பிரதி செயலாளர் முஹம்மட் ஜஹான், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: