News Just In

1/07/2026 09:57:00 AM

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு: 2500 பேர் விரைவில் நியமனம்

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு: 2500 பேர் விரைவில் நியமனம்



கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், முதற்கட்டமாக 2,500 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சுமார் 5,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் மூலம் முதற்கட்டமாக 2,500 ஆசிரியர்களை விரைவில் இணைத்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வெறும் ஆட்சேர்ப்புடன் மாத்திரம் நின்றுவிடாமல், மாகாணத்திற்குள் ஆசிரியர்களைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதில் உள்ள சவால்கள் குறித்தும் ஆளுநர் இங்கு விளக்கமளித்தார்.

சில கல்வி வலையங்களில் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கும் அதேவேளை, சில பகுதிகளில் கடும் பற்றாக்குறை நிலவுவதாகவும், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலமான பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஆசிரியர் சமநிலைப்படுத்தல் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஆசிரியர்கள் நியமனம் பெற்றவுடன் குறுகிய காலத்திலேயே இடமாற்றம் பெற்றுச் செல்வதைத் தடுக்கும் வகையில் புதிய நிபந்தனையொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் அறிவித்தார்.

No comments: