இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் தற்சமயம் அரங்கேறி வரும் அதிகாரப் போர், ஈழத் தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை தென்னிலங்கை அரசின் கைகளில் அடகு வைக்கும் ஒரு தற்கொலை முயற்சி என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஒருபுறமும் கட்சியின் நிர்வாகப் பிடியைச் சட்ட ரீதியாகத் தக்கவைத்துள்ள சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மறுபுறமும் நடத்தும் ஒரு அரசியல் மோதல் தமிழ் தேசிய அரசியலின் அஸ்திவாரத்தையே சிதைத்து வருகின்றது.
சிறீதரன் அரசாங்கத்திற்குச் சார்பாக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதாகச் சுமந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, சிறீதரனின் தேசியவாத முகமூடியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதில் அரசியலமைப்புப் பேரவையிலிருந்து அவரை விலகச் சொல்லி கட்சி விடுத்த பணிப்புரை, சிறீதரனை அரசியல் ரீதியாக முடக்க சுமந்திரன் விரித்துள்ள ஒரு தந்திரமான வலையாகவே பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பின்பும் சிறீதரன் காக்கும் மௌனம், அவரது தலைமைத்துவப் பலவீனத்தையே காட்டுகின்றது.
இக்கட்டான சூழலில் மௌனமாக இருப்பது அவர் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதோடு தென்னிலங்கை அரசுக்கு சாதகமான அரசியல் வெற்றிடத்தையும் தமிழர் பிரதேசங்களில் உருவாக்குகின்றது.
தமிழ்த் தலைமைகள் தங்களுக்குள் துரோகி பட்டம் சூட்டி மோதுவது தென்னிலங்கை அரசாங்கத்திற்குப் பெரும் வரப்பிரசாதமாகியுள்ளது.
இதன் தாக்கமாகத்தான் அண்மையில் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி கைபற்றி இருந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்திக்கு இவ்வாறு ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தனர்.
இதனுடன் மட்டும் இல்லாமல் வலுவான அரசியல் எதிர்ப்பு இல்லாத சூழலைப் பயன்படுத்தி தொல்பொருள் மற்றும் வனவளத் திணைக்களங்கள் மூலம் நில அபகரிப்பு தடையின்றித் தொடர்கின்றது.
இந்தநிலையில், சுமந்திரனின் சட்டவாதப் பிடிவாதமும் மற்றும் சிறீதரனின் கையாலாகாத மௌனமும் சேர்ந்து தமிழ் தேசியத்தின் இருப்பையே வேரறுக்கின்றன.
மக்களின் ஆணை பெற்ற ஒருவர் அரசாங்கத்திற்கு மறைமுகமாக முண்டுகொடுப்பதும், மற்றவர் தனிப்பட்ட ஈகோவினால் கட்சியைச் சிதைப்பதும் பெரும் வேடிக்கையான சூழலை உருவாக்கியுள்ளது.
No comments: