News Just In

12/15/2025 05:52:00 PM

வெருகல் பிரதேச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வெருகல் பிரதேச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்


திருகோணமலை - வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இணைந்து சுகயீன விடுமுறையில் ஈடுபட்டதுடன் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வெருகல் பிரதேச செயலக முன்றலில் இன்று (15) குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததோடு சேவை பெறாது வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

வெள்ள அனர்த்தத்தின் போது மக்களுக்காக சேவையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக சிலரின் தனிப்பட்ட நலனுக்காக, ஆராயாது கடந்த சனிக்கிழமை (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் செயற்பாட்டுக்கு எதிராக இவ் சுகயீன விடுமுறை போராட்டமும், அமைதி கவனயீர்ப்பும் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்தின் போது வெருகல் பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் நேற்று (14) ஒருவர் ஈச்சிலம்பற்று காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: