News Just In

12/15/2025 05:46:00 PM

தென்னிலங்கையில் அநுர அரசுக்கு ஏற்பட்ட மற்றுமொரு தோல்வி

தென்னிலங்கையில் அநுர அரசுக்கு ஏற்பட்ட மற்றுமொரு தோல்வி



பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் அநுர தலைமையிலான அரசாங்கம் நகர சபைகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

நாடாளாவிய ரீதியில் இதுவரை 37 நகர சபைகளில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏற்கனவே தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து உருவாக்கிய காலி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

காலி மாநகர சபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆகும். வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டன.

19 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்போது தேசிய மக்கள் கட்சியின் 17 உறுப்பினர்கள் மட்டுமே வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மாநகர சபையை நிறுவுவதற்கு தேசிய மக்கள் கட்சியை ஆதரித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி மேயரும், அந்தக் கட்சியின் மற்றொரு உறுப்பினரும் இன்று வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

கிராம மட்டங்களில் ஆளும் தரப்புக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுகளை சாதகமாக்கிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், அடுத்தகட்டத்திற்கான பிரசாரமாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: