News Just In

12/23/2025 09:22:00 PM

தையிட்டியில் இருப்பது போலி திஸ்ஸ விகாரையே; பல மர்மங்களை உடைத்த நாகதீப ரஜ மகா விகாராதிபதி

தையிட்டியில் இருப்பது போலி திஸ்ஸ விகாரையே; பல மர்மங்களை உடைத்த நாகதீப ரஜ மகா விகாராதிபதி




போர் காலத்தில் சிவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே இந்த 'திஸ்ஸ விகாரை' எனப்படும் போலி திஸ்ஸ விகாரை எனவும், தமிழ் மக்கள் அமைதியானவர்களாக இல்லையென்றால் நாங்கள் இப்பகுதியில் வாழ்வதே சாத்தியமாக இருக்காது எனவும் நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தெரிவித்தார்.

அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலி திஸ்ஸ விகாரையிற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

அந்த திஸ்ஸ விகாரை நாகதீப ராஜமகா விகாரையிற்கு சொந்தமானதாகும். அந்த திஸ்ஸ விகாரையின் உரிமைகள் முழுமையாக நாகதீப ராஜமகா விகாரைக்கே உரியது.

ஆனால் தற்போது “திஸ்ஸ விகாரை” என்று அழைக்கப்படும் அந்த இடம், இந்தப் பகுதியிலுள்ள — குறிப்பாக காங்கேசந்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் சிவில் மக்களுக்கே சொந்தமானதாகும்.

போர் காலத்தில் சிவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே இந்த “திஸ்ஸ விகாரை” எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விஷயங்களை நாம் அனைவரும் சரியாக ஆராய்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

அந்த போலி திஸ்ஸ விகாரையின் தேரருக்கு வடமாகாணத்தின் பிரதான சங்கநாயக பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த ஜின் தோட்டை நந்தாராம தேரர் துறவியாகி இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கூட ஆகவில்லை,எனது கணிப்பின்படி அவருக்கு உபசம்பதா பெற்றுக் கொண்டது கூட 4 அல்லது 5 ஆண்டுகளே ஆகின்றன.

இவ்வாறான நிலையில் இருந்தும், புத்த சாசனத்திற்கு பொருந்தாத வகையில், மகா சங்கரத்னம் அவருக்கு வட மாகாணத்தின் பிரதான சங்கநாயக பதவியை வழங்கியிருக்கிறது.

இதுபோலவே, எங்கள் அமரபுர நிகாயத்தில் மொத்தம் 22 பங்குகள் உள்ளன. அந்த 22 பங்குகளில் ஒரு பகுதியே அந்த ஸ்வாமீன் வாஹன்சே அவர்களுக்கு சொந்தமானது. ஆகையால் இன்று உண்மையில், முழு அமரபுர மகா நிகாயத்தின் மகா லேக்ஷகாதிகாரி நாயக ஸ்வாமீன் வாஹன்சே கூறியது, அந்த பிக்குவுடன் இணைந்து இந்த விடயத்தில் உதவி செய்து, இந்த செயல்களை முன்னெடுத்து வருகின்றார்

உண்மையில், எங்களுக்கு தேவையானது, இந்தப் பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்த வரலாற்றை நினைவுகூர்வது தான்.
நாங்கள் இங்கு 53 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தோம். நானும் நாகதீப விஹாரஸ்தானத்தில் உள்ள தொழிலாளர் சமூகமும் தமிழ் மக்களுடன் இந்தப் பகுதியில் வாழ்ந்தோம்.

இந்தப் பகுதியின் ஒவ்வொரு தமிழ் சகோதரரும் நாகதீப விஹாரஸ்தானத்தில் யார் ஆசான்கள் என்று அறிவார்கள்.ஆனால், தற்போது உண்மையில், புதிய ஆசான்கள் வந்து, தமிழ் மக்களின் நிலங்களை கைப்பற்றிக் கொண்டு, விஹாரஸ்தானங்களை கட்டி வருகின்றனர். இது உண்மையில், நமது பார்வையில், சரியான செயல் அல்ல.

எனவே, இந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம். இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் மிகவும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். அதேபோல், இந்த நடவடிக்கைகள் உயர்திரு மகாநாயக ஸ்வாமீன் வாஹன்சேக்களை இணைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகையால், உயர்திரு மகாநாயக ஸ்வாமீன் வாஹன்சேக்களுக்கு, வேறு எந்த நிகாயத்தின் பிரிவிலும் தலையிடும் அதிகாரம் எவ்விதத்திலும் இல்லை. அவர்களுக்கு செய்யக்கூடியது, தமக்கு வழங்கப்பட்ட அந்த பதவியை பாதுகாத்துக் கொண்டு இருப்பதுதான்.

எனவே, அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் ஒரு அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்.

இந்த தமிழ் மக்கள் இதுவரை மிகவும் அமைதியான மக்களாகவே நான் பார்த்திருக்கிறேன். அப்படியில்லையென்றால், நாகதீப விஹாரஸ்தானத்தைச் சுற்றியுள்ள இந்தப் பகுதியில் அமைதியான மக்கள் இல்லையென்றால், அல்லது தமிழ் மக்கள் அமைதியானவர்களாக இல்லையென்றால், எங்களுக்கு இப்பகுதியில் வாழ்வதே சாத்தியமாக இருக்காது.

போர்காலத்தில்கூட, இந்த விஹாரஸ்தானத்தில் பணியாற்றிக்கொண்டே, தமிழ் மக்களுடன் நாம் மிகவும் நல்ல முறையில், பரஸ்பர புரிதலுடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வந்தோம்.

எனவே, நாளை அதிகாலை எனை விமர்சிக்கக் கூடியவர்கள், இப்படிப்பட்ட ஒரு பேச்சை நான் பேசினேன் என்று குற்றம் சாட்டினாலும், அதனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் யாருக்கும் பயப்படாமல் தான் இதுவரை இந்தப் பகுதியில் வாழ்ந்தேன். அதுபோலவே, இனியும் அப்படித்தான் வாழ்வேன்.

அதனால், இந்த விடயத்தில் அரசு முன்வந்து நடவடிக்கை எடுப்பது நல்லது என்பதே என் கருத்து. அதேபோல், நாகதீப விஹாரஸ்தானத்தின் ஆசாரியர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டால், ஒரு முடிவுக்குவர முடியும். அப்பொழுது, இது ஒரு போலி இடமா அல்லது உண்மையான இடமா என்பதை நாங்கள் நிரூபிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

ஆகையால், அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதே என் முதன்மையான நோக்கமாக உள்ளது. அப்போது, எங்கள் மக்களுடனும், இங்கு வாழும் தமிழ் சகோதர மக்களுடனும், நாம் சுலபமாகவும் அமைதியாகவும் வாழ முடியும்.

எனவே, இதை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்றால், அரசில் உள்ள நல்ல உள்ளங்கள், குறிப்பாக எமது ஜனாதிபதியிடம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாகதீப விஹாரஸ்தானத்தின் ஆசாரியர்கள், அதேபோல் தையட்டி பகுதியில் வாழும் தமிழ் மக்கள், அந்த நிலங்களின் உரிமையாளர்கள், அவர்கள் தங்களுடைய உரிமை ஆவணங்கள், பத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிரூபிக்கக் கூடிய வாய்ப்பை வழங்க வேண்டும்.

அதேபோல், உண்மையான திஸ்ஸ விகாரை எங்கு அமைந்துள்ளது என்பதை நானும் நிரூபிக்க முடியும். ஆகையால், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமெனில், புதிய பிரச்சினைகளை உருவாக்காமல் செயல்படுவதே உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்தும் வழியாகும் என தெரிவித்துள்ளார்.

No comments: