கல்முனை மாநகர சபை திண்ம கழிவகற்றல் சேவைக்கு முதற்கட்ட தீர்வு – மாநகர ஆணையாளர் ஏ.டி.எம்.றாபி
கல்முனை மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் சேவையில் நிலவி வந்த சிக்கல்களுக்கு முதற்கட்ட தீர்வு தற்போது கிடைத்துள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.டி.எம்.றாபி தெரிவித்தார்.
கல்முனை மாநகர ஆணையாளருக்கும் சிலோன் மீடியா போரம் (ஊடகவியலாளர்களு) க்கிடையில் இடம்பெற்ற சினேகபூர்வ சந்திப்பின் போது கல்முனை மாநகர திண்மக்கழிவகற்றல் பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார். திண்ம கழிவகற்றல் தொடர்பில் மாநகர சபை எதிர்கொண்ட சவால்களை கடக்க ஆரம்ப நிலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் சேவை ஒரு அளவு சீராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் கல்முனை மாநகரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் நிரந்தரமான தீர்வு ஒன்றை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் இதன்போது தெரிவித்தார். இதற்காக அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி நிர்வாகம், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கல்முனை மாநகரை சுத்தமானதும் சுகாதாரமானதும் ஆன நகரமாக மாற்றும் நோக்கில் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், ஊடகங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இந்நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: