67 பேர் வெற்றிவாகை சூடினர்.
(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
மட்டக்களப்பின் வரலாற்றில் முதன் முறையாக சுமார் 214 பேர் என்ற அதிக போட்டியாளர்கள் பங்குபற்றிய மாபெரும் சதுரங்கப் போட்டி நிகழ்வு மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
எட்டுப் பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் இடம்பெற்ற இப்போட்டியிலிருந்து 67 பேர் வெற்றி வாகை சூடிக் கொண்டனர்.
மட்டக்களப்பு றொட்டரக்ட் கழகமானது மட்டக்களப்பு சிங்கிங் பிஸ் செஸ் கழகத்துடன் இணைந்து, திறமைகள், பொறுமை மற்றும் தந்திரோபாயத் திறமைக்கு சான்றாக ஆர்வமுள்ள வீரர்களை ஒன்றிணைத்து, “செக்மேற் சம்பியன்சிப் 2025” என்ற இந்த சிறப்பு நிகழ்வை நடத்தியிருந்தனர்.
போட்டி நிகழ்வுகள் எட்டுப் பிரிவுகளாக இடம்பெற்றன.
மட்டக்களப்பு றொட்டரக்ட் கழகத் தலைவர் திரு. டேவிட் சியாம் கிருபைநாயகம் நெறிப்படுத்தலில் அக்கழகத்தின் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணதாஸ் டனுஸ்காந் தலைமையில், சிங்கிங் பிஸ் செஸ் கழகத்தின் தலைவர் அருள்ராஜா சௌத்திரியின் வழிகாட்டுதலில் இடம்பெற்ற இப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 67 பேர் கௌரவித்துப் பாராட்டப்பட்டனர்.
இதில் முதலிடத்தைப் பெற்ற எட்டுப் பேருக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள், உட்பட தலா 5000 ரூபாய் பணப்பரிசு என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், 16 பேருக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள், என்பனவும் 43 பேருக்குச் சிறப்புச் சான்றிதழ்களும், அத்துடன் போட்டியில் பங்குபற்றிய அனைத்து 214 மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த சதுரங்கப் போட்டியின் சிறப்பம்சமாக போட்டியில் பங்கு பற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான மட்டக்களப்பு வின்சன்ற் தேசியப் பாடசாலையில் ஆண்டு 11இல் கற்கும் சுதர்சன் மதுரா முதலாமிடத்தையும் மிதுரா 2ஆம் இடத்தையும், 9ஆம் ஆண்டில் கற்கும் கோபிஷா மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் றொட்டரக்ட் கழக உறுப்பினர்கள், செஸ் பயிற்றுவிப்பாளர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
No comments: