
.இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் முதலீடு செய்த யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2024 இல் நாட்டின் சில்லறை எரிபொருள் சந்தைக்கு வந்த அவுஸ்திரேலியா எரிசக்தி நிறுவனமான யுனைடெட் பெட்ரோலியம், தனது நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
எரிபொருள் சந்தையை போட்டித் தன்மைக்கு கொண்டுவரும் அரசாங்கத்தின் உத்திக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
யுனைடெட் பெட்ரோலியம் மூன்று மாதங்களுக்கு முன்பே விலகுவதற்கான தனது முடிவை அதிகார பூர்வமாக தெரிவித்ததாக மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இயக்கம் மற்றும் தன்மையில் அதிருப்தியை வெளிப்படுத்திய நிறுவனம் எதிர்பார்த்த இலாபத்தை அடைய மிகவும் சிறியதான இலங்கை சந்தையில் இயலாது என்று கூறியதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்துடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, நிறுவனம் டிசம்பர் 2024 இல் அதன் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியது. யுனைடெட் பெட்ரோலிய நிறுவனத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 64 எரிபொருள் நிலையங்கள் பின்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாகத்தின் கீழ் மீண்டும் மாற்றப்பட்டுள்ளன என்று நெத்திகுமாரகே கூறினார்.
யுனைடெட் பெட்ரோலியம் கம்பெனி லிமிடெட் அதன் உள்நாட்டு சந்தைக்கு வெளியே முதல் வெளிநாட்டு சில்லறை முயற்சியாக இருந்தது. முதலீட்டு சபையின் கீழ் 20 ஆண்டு விநியோக உரிமையை பெற்றுக் கொண்டு எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை செய்வதற்கான 27.5 மில்லியன் டொலர் உறுதியையும் இந்த நிறுவனம் வழங்கியிருந்தது.
எரிபொருள் சந்தையை தாராளமயமாக்கும் கொள்கையின் நம்பகத்தன்மை குறித்து நிறுவனம் வெளியேறும் போது கேள்வி எழுப்பியுள்ளது.
மார்ச் 2023 இல், சீனா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 3 புதிய உலகளாவிய நிறுவனங்கள் 20 ஆண்டு உரிமங்களின் கீழ் நாட்டிற்குள் நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த நடவடிக்கை போட்டித்தன்மையை அதிகரிப்பது, விநியோக நிலைத்தன்மையை உறுதி செய்வது மற்றும் மிகவும் தேவையான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டிந்தது. யுனைடெட் பெட்ரோலியம் வெளியேறியதன் மூலம், இந்திய, சீன மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே எரிபொருள் சந்தையில் உள்ளன.
No comments: