“இலங்கையர்தினம்” தேசிய விழாவிற்கான பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்களன்று 01.09.2025 இடம்பெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சினுடாக இலங்கையில் நல்லிணக்கம், ஒருமைப்பாடு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் தேசிய அடையாளத்தை முழுமையாக்குவதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன மத பேதமின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடக்கூடிய ஒரு தினமாக இலங்கயர் தினம் கொண்டாடப்படவுள்ளன.
எமது அடையாளத்தை நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையாக மீட்டெடுப்பதற்குமான ஒரு முயற்சியாக “இலங்கை தின தேசிய விழா” அமுலாக்கப்படவுள்ளது.
இலங்கையின் அனைத்து சமூகக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கருத்துக்கள் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் "இலங்கையர்தின தேசிய விழாவை" நடாத்துவதற்காக மாவட்ட மட்டத்தில் கருத்துகள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கலாசார, பாரம்பரிய விழுமியங்களைப் பற்றி அதிகாரிகள், துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்படடுள்ளது.
இந்த நிகழ்வில் கலாசார திணைக்களப் பணிப்பாளர் கே.எஸ். டில்ஹானி, இணைப்புச் செயலாளர் பிரேமரத்ன தென்னக்கோன், மாவட்ட உதவிச் செயலாளர் ஜி.பிரணவன், பிரதேச உதவிச் செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கலாசார திணைக்களம் இலங்கையர் தினத்தை கொண்டாடுவதற்கு 25 மாவட்டத்திற்கும் சென்று மக்களின் கருத்துக்களை சேகரித்து வருவதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இத்தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: