News Just In

3/30/2025 11:23:00 AM

தேர்தல் பிரச்சாரங்களின்போது கலாச்சார சீர்கேடான விடயங்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் இல்லை!

தேர்தல் பிரச்சாரங்களின்போது கலாச்சார சீர்கேடான
விடயங்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் இல்லை!

நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகர் உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு.



அபு அலா
சம்மாந்துறை பிரதேச சபையை முதலாம் இலக்க மாம்பழச் சின்ன சுயேட்சைக் குழு கைப்பற்றுமென்று நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர்தெரிவித்தார்.

சம்மாந்துறை ECM நிறுவன கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாபீர் பௌண்டேசன் சார்பில் தெரிவாகும் உறுப்பினர்கள் யாரும் எவ்வித ஊதியங்களையும் பெறமாட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதியை நாபீர் பௌண்டேசன் வழங்கும்.

மாட்டிறைச்சி விலையை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான யுக்தி எங்களிடம் இருக்கின்றன. அதை நாம் இப்போது சொல்லமுடியாது. அவ்வாறு சொன்னால் பிற கட்சிகள் கொப்பி பண்ணிவிடுவார்கள்.

குறிப்பாக, பிரதேச சபை சட்டத்திற்கமைவாக சம்மாந்துறை பிரதேச மக்களும், ஏனையவர்களும் பயன்பெறும் பொருட்டு மரக்கறித் தோட்டங்கள் நிறுவப்படும். அதற்கான இடங்களை அடையாளங்கண்டு வைத்துள்ளோம்.

வெற்றிபெறும் எங்களது சுயேட்சைக்குழு எதிர் அரசியல் செயற்பாடுகளில் ஒருபோதும் ஈடுபடாது. ஏனைய கட்சிகளூடாக சபைக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு சம்மாந்துறையில் புதிய அரசியல் கலாச்சாரம் தோற்றுவிக்கப்படும்.

எங்களின் தேர்தல் பிரச்சாரங்களின்போது போஸ்ட்டர்கள், பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், மது போதை, அடிதடி போன்ற கலாச்சார சீர்கேடான
விடயங்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் எங்களிடம் அறவேயில்லை. அந்த நடைமுறைகளை முற்றுமுழுதாக நாங்கள் புறக்கணிக்கின்றோம்.

சம்மாந்துறை மக்கள் எங்களுக்கான அதிகாரத்தை வழங்கினால் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மக்கள் நலன் திட்டங்களை ஆரம்பித்து குறைந்தது 2000 பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவோம்.

சம்மாந்துறை பிரதேச சபையை உதாரணம் கூறுமளவுக்கு சமூகங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன.
எவ்வித அரசியல் அதிகாரங்களும் இல்லாமல் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக நலன் சார்ந்த திட்டங்களை இன்றுவரை முன்னெடுத்து வருகிற நாபீர் பௌண்டேசனின் மீது சம்மாந்துறை பிரதேச மக்கள் மாத்திரமல்ல ஏனைய மாவட்டங்களிலும் உள்ள மக்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.


அதற்கான ஆரம்பமே சம்மாந்துறை பிரதேச சபையை நாங்கள் கைப்பற்றும் செயற்பாடுகளுக்கு மக்கள் தீர்ப்பை வழங்கவுள்ளார்கள். நான் எப்போதும் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பவன் என்ற அடிப்படையில் நாபீர் பௌண்டேசனின் பணிகள் தொடரவேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் அதனை மக்களது கரத்திலேயே விட்டுவிடுகின்றேன் என்று தெரிவித்தார்.

No comments: