
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது.
அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.
இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர்.

இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது.
No comments: