நேற்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது. 20.02.2025.
கடந்த அரசாங்க காலபப்குதியில் இலஞ்சமாக மதுபானசாலை அனுபதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்ததாக தற்போதைய ஜனாதிபதி மேடைகளில் குறிப்பிட்டிருந்தார். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை அதற்கு முன்னதாகவே எமக்கு தெரியும். ஏனென்றால், மதுபானசாலை அனுமதிபத்திரம் வேண்டுமா என எம்மிடமும் கேட்டார்கள். நாங்கள் எடுக்கவில்லை. ஆனால் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் மேடைகளில் எல்லாம் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கின் சுற்றாலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த மதுபானசாலை அனுமதி வழங்கப்பட்டதாக அப்போதைய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. மட்டக்களப்பில் உள்ள ஒரே வெள்ளைக்காரன். வெள்ளை தோல் உள்ளவன் நான் தான் என்றே நான் எப்போதும் குறிப்பிடுவேன். ஏனென்றால் அங்கு வெள்ளைக்காரன் வருவதில்லை. உரிய போக்குவரத்து வசதி இல்லை. அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் இல்லாத ஒரு பகுதியில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபானசாலை அனுமதி மாத்திரம் வழங்கி பயனில்லை. ஆனால் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவே இவை மேற்கொள்ளப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல அபிவிருத்தி செயற்பாடுகள் காணப்பட்ட நிலையில் இந்த மதுபானசாலை அனுமதி வழங்கப்பட்டமை குறித்து நாம் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான எட்டு மதுபானசாலைகள் வரவிருந்த நிலையில் நாம் வீதிகள் தோறும் என்று போராட்டங்களை மேற்கொண்டோம். அந்த பிரதேச செயலாளர்களின் தலையீட்டினால் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஒரு மதுபானசாலை மாத்திரமே திறக்கப்பட்டது. அதுவும் ரெஸ்டுரன்ட் ஒன்று. அதைவிட மட்டக்களப்பில் எதையும் திறக்கவிடவில்லை. இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அம்பாறை பெரியநீலாவனை பிரதேசத்தில் மதுபானசாலை ஒன்றை புதிதாக திறப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதிபத்திரம் முன்னைய அரசாங்கத்திலா அல்லது தற்போது வழங்கப்பட்டதாக என எனக்கு தெரியாது. அனுமதிப்பத்திரம் முன்னைய அரசாங்கத்தில் வழங்கப்பட்டது. அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.
இந்த மதுபாசாலை திறக்கப்படவுள்ளது. அதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு எதிராக கடந்த வாரம் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெருந்தொகை மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் பெயர் பட்டியல் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பட்டியலொன்றை வெளியிட்டார். இந்த பட்டியலில் மதுபானசாலை உள்ள இடமும் பெயரும் முகவரியுமே காணப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினால் முகவரியை நாமும் பெற்றுக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் வழங்கப்பட வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை. அரசியல் இலஞ்சமாகவே இந்த மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டர். இது யாரால் வழங்கப்பட்டது? யார் பெற்றுக் கொண்டது? அதனை பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவீர்களா? அதன்போது இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக குறிப்பிட்டனர். அவ்வாறாயின் யார் இந்த விசாரணையை மேற்கொள்வது என்று நான் அப்போதே கேள்வி எழுப்பினேன். சி.ஐ.டி.-இனரா? பொலிஸாரா அல்லது இலஞ்ச ஊழல் துறையினரா? ஜனாதிபதி செயலகமா? யார் விசாரணை மேற்கொள்வது? ஆனால், இதுவரை அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இவ்வாறான மதுபானசாலை அனுமதிகளை இரத்து செய்வதற்கோ அல்லது இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்தினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது. இந்த அனுமதிகள் சட்டரீதியாகவே வழங்கப்பட்டுள்ளன. எனவே எமக்கு எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் ஒருவர் கூறுகிறார். ஆனால் பிரசார மேடைகளில் கூறப்பட்டது அதுவல்ல. இலஞ்சமாக வழங்கப்பட்டு இருப்பின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு மாவட்டங்களை எடுத்துக் கொண்டால், கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 வாக்காளர்களுக்கு ஒரு மதுபானசாலை காணப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கு மாகாண அமைச்சரவை அமைச்சர் சந்திரசேகரன் அவர்களும் இதனை ஏற்றுக் கொள்வார் என்று நான் நினைக்கின்றேன். கிளிநொச்சி மக்களுக்கு அபிவிருத்தி என்று ஒன்றை காட்டியதே இல்லை. இவ்வாறான நிலையில் மதுபானசாலைகளின் அதிகரிப்பு காரணமாக மக்கள் மதுபோதைக்கு அடிமையாகும் அளவு அதிகரிப்பதால் அவர்களது பொருளாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுகிறது. அதனால் அது தொடர்பில் கௌரவ சபை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன், தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அம்பாறை பெரியநீலாவனையில் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் மதுபானசாலையை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோருகிறேன். இதேவேளை ஏனைய மதுபானசாலைகளை மூடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இது மக்களுக்கு பாரிய பிரச்சினையாகும். கௌரவ ஜனாதிபதி அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஆட்சிக்கு வந்த பின்னர் ஒக்டோபர் மாதம் 5ஆம் வரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த சகல கடிதங்களும் மதுவரித் திணைக்களத்திலேயே காணப்பட்டது. இதனை நேரில் கண்டவர்கள் உள்ளனர். இந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்த பரிந்துரையை மேற்கொண்டார் என்பதை நேரில் கண்டவர்கள் இருந்தனர். அதற்கான புகைப்படங்களை எமக்கு ஆதரங்களாக எமக்கு வெளியிட முடியாது. ஆனால் நாம் கண்கூடாக கண்டோம். ஜனாதிபதிக்கான கடிதத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பரிந்துரையை செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இது மதுவரித் திணைக்களத்தில் காணப்பட்டது. இவை ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டது. மதுபானசாலை அனுமதிகள் இலஞ்சமாக வழங்கப்பட்டன. நாம் அவற்றை மூடுவோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இதனை நிறுத்துவோம். அதனை கண்டறிவோம் என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மதுபானசாலை அனுமதி எங்கெங்கு வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால், இவர்களுக்கு அரசியல்வாதிகள் இலஞ்சம் வழங்கி உள்ளார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த மதுபானசாலை அனுமதி பெற்றவர்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஏனெனில் அதுவொரு இலஞ்சம். வீடுகளுக்கு தீ வைத்தவர்களின் பட்டியல் அண்மையில் வெளிப்படுத்தப்பட்டது. அந்த பட்டியல் மாத்திரம் போதாது. அவர்கள் தவறாக பெற்றிருப்பின் அந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளுங்கள். ஜனாதிபதி நிதியத்தில் நிதி பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டனர். அவ்வாறு வழங்கிய பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இதேவேளை, அம்பாறை பெரியநீலாவனையில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலையை திறக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். அத்துடன், இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் என்று நாம் நம்புகின்றோம். அதேவேளை மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுக்கிறேன்
No comments: