(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஐநா மன்றத்தின் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான அமர்வில் முதன் முறையாக இலங்கை முஸ்லிம்கள் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மன்றத்தின் சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கான 17வது அமர்வு நொவெம்பெர் 28, 29 ஆகிய இருதினங்களில் ஜெனீவாவில் இடம்பெற்றது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் சம்பந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அங்கே இலங்கை முஸ்லிம்களின் நிலைமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
இது வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம்களின் நிலைமை பற்றி எடுத்துச் சொல்லப்பட்டதாகும். இதுபற்றி நல்ல வரவேற்பிருந்ததாக இந்த விடயத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்;.எல்.எம். புஹாரி முஹம்மத் தெரிவித்தார்.
அவர் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் - தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் சார்பாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் நிறுவனத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு சட்டத்தின் முன் சமமான மரியாதையும் பாதுகாப்பும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், ஐசிசிபிஆர் சட்டம் போன்ற சட்டங்கள் முஸ்லிம்களை ஒடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் இது, முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரம், கருத்து மற்றும் அவர்களின் நம்பிக்கையின் நடைமுறையை கட்டுப்படுத்துகிறது. இந்தச் சட்டங்கள் முஸ்லிம்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பை பொது இடங்களில் கட்டுப்படுத்துகின்றன.
ஈராயிரத்து பத்தொன்பது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் இருந்து, முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள், அதிகாரிகளால் பயங்கரவாதிகள் என்று பொய்யாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தவறாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர், ஆனால், விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் அதிகரித்து வரும் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர், இதனால் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளை அணுக அவர்கள் பயப்படுகிறார்கள்.
சமீபத்திய வழக்கில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் 70 பேர்; தலையில் முக்காடு அணிந்ததற்காக, அவர்கள் ஆடைக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, அவர்களது பரீட்சைப் பெறுபேறுகளை, பரீட்சைத் திணைக்களம் தர மறுத்துள்ளது.
உளவியல் ரீதியான தீங்கு மற்றும் சமூக தனிமைப்படுத்தல், முஸ்லிம்களின் பங்கேற்புக்கு ஒரு முக்கியமான தடையாகும், இது அடக்குமுறை சட்டத் தரங்களுடன், மீறல்களுக்கு நீதி தேடும் திறனைத் தடுக்கிறது.
இலங்கை அரசாங்கம் இந்த மீறல்களை நிறுத்துவதற்கு உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு அவசியமான பொது இடங்களுக்கு பாதுகாப்பான அணுகலை மறுக்கும் பாரபட்சமான சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இன, மத பாகுபாடுகளைக் கண்காணித்து நிவர்த்தி செய்வதற்கும் கடந்தகால மத அட்டூழியங்கள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறல் உட்பட அனைவருக்கும் சம நீதியை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இறுதியாக, இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, சிறுபான்மையினரின் சமத்துவம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: