News Just In

9/19/2024 05:31:00 PM

எது பெரிய கட்சி?



இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாகத் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தை எதிர்க்கும் தமிழ் அரசுக் கட்சியினரும் இருக்கின்றனர். இதில், முதன்மையானவர் சிவஞானம் சிறீதரன். ஆனால், கட்சியின் உத்தியோகபூர்மான முடிவு சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதும் – தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிப்பதுமாகும். இந்தப் பின்புலத்தில் தமிழ் அரசுக்கட்சியின் முக்கியஸ்தரும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தீர்மானத்தின் சூத்திரதாரியுமான சுமந்திரன், சஜித்துக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் பேசுகின்றார்.

சஜித்தின் மேடையில் நின்றவாறு தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்கப் போவதாக சூளுரைக்கிறார். தமிழ் அரசுக் கட்சி ஒரு பெரிய கட்சி. அந்தக் கட்சி சொல்வதைத் தான் தமிழ் மக்கள் கேட்பார்கள் என்பதுதான் தமிழ் அரசுக் கட்சியின் புரிதல். உண்மையில், எது பெரிய கட்சி? ஒரு மக்கள் கூட்டத்தை வழிடத்துவது என்பது வெறுமனே தீர்மானங்களில் தங்கியிருக்கும் ஒன்றல்ல – மாறாக, எந்தக் காலத்தில் என்ன தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதில்தான் தங்கியிருக்கின்றது. முன்னர் எடுத்த தீர்மானங்களுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்டுதான் புதிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் கூட வெற்றிபெறவில்லை. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசியல் யாப்புக் கதையொன்று சொல்லப்பட்டது.

தீர்வைத் தொடும் தூரத்தை நெருங்கிவிட்டோம் என்றவாறே பேசப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? சுமந்திரனின் அனைத்து நகர்வுகளும் தோல்வியடைந்தன. ஆயுதப் போராட்டமும் தோல்வியடைந்தது தானே அதற்காக அவர்களை எவருமே குற்றஞ்சாட்டுவதில்லையே என்று கேள்விகள் வேறு. ஆயுதப் பேராட்டம் தோல்வியில் முடிவுற்றது உண்மை. ஆனால், அதற்கான உச்சபட்சமான அர்ப்பணிப்பை – தியாகத்தை அவர்கள் செய்திருந்தனர். அந்தத் தோல்விக்கு உள்ளகக் காரணங்களை விடவும் சர்வதேச காரணங்களே அதிகம். அதனை ஜனநாயக தளத்தில் இழைக்கப்படும் தவறுகளோடு ஒப்பிட முடியாது.

கடந்தகாலத்தில் இடம்பெற்ற எந்தவொரு தவறிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாமல் தமிழ் அரசுக் கட்சி மீண்டும் ஒரு தவறான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. பெரிய கட்சி என்னும் தகுதியைக் கொண்டே இந்தத் தவறான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. பெரிய கட்சி என்பது மக்களை எந்தச் சூழலில் எவ்வாறு வழிநடத்துவது என்னும் புரிதலிலிருந்து தீர்மானங்களை எடுப்பதாகும். அவ்வாறில்லாதபோது, பெரிய கட்சி என்பது வெறும் உச்சரிப்பு மட்டும்தான். தமிழ் அரசுக் கட்சியை பெரிய கட்சியென்று கூறுவதும் இந்த அடிப்படையைக் கொண்ட ஒன்றுதான். தமிழ் அரசுக் கட்சி இப்போது பெரிய கட்சியல்ல மாறாக, மிகவும் பலவீனமான – பரிகசிப்புக்குரிய ஒரு கட்சியாகவே காட்சியளிக்கின்றது. இது பெரிய கட்சி – சிறிய கட்சி என்று விவாதங்கள் புரியும் காலமல்ல – மாறாக, அனைவரும் முடிந்தவரையில் ஓர் ஐக்கிய முன்னணியாக செயல்படுவதற்கான காலமாகும். இதனை உணராத – திருந்தாத கட்சிகள் தமிழ் மக்களுக்கான கட்சிகளாகத் தொடர்ந்தும் நிலைக்கும் தகுதியற்றவைகளாகும்
நன்றி ஈழநாடு 

No comments: