எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்வதுடன் சர்வதேசமயப்படுத்தமுடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
அதன்படி இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது குறி;த்த பேச்சுவார்த்தைகள் வலுப்பெற்று, அதனை முன்னிறுத்தி சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.
இதுகுறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இலங்கைத் தமிழ்ச்சங்கம், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
ஈழத்தமிழ் மக்கள் சார்பாக பலதரப்பட்ட சமூக அமைப்புக்களும், அவற்றுடன் பல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை நாம் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கின்றோம்.
இவ்வாறு களமிறக்கப்படும் பொதுவேட்பாளர் மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்யவும், சர்வதேசமயப்படுத்தவும் முடியும் என நம்புகின்றோம்.
No comments: